போராளிகள் மீதான தேசத்தின் குரலின் பற்றை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது: விடுதலைப் புலிகளின் தளபதிகள் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம், தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மீதும் போராளிகள் மீதும் கொண்டிருந்த பற்றை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தான் படித்த விடுதலைத் தத்துவம் அதனூடாக தான் பார்க்கின்ற தமிழீழத்தை தேசியத் தலைவரின் சொல்லிலும் செயலிலும் தான் காண்பதாகவும் அதனால்தான் தலைவரின் பால் கவரப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் ஆரம்ப காலத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்து வந்ததாக நடேசன் குறிப்பிட்டார். "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தை நினைவு கூர்ந்து கருத்து வெளியிட்ட போதுதான் நடேசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது: "எமது போராட்டச் செயற்பாடுகளுடன் இணைவதற்கு முன்பாக இங்கிலாந்தில் ஒரு உளவியல் நிபுணராக உளவளத் துணை ஆலோசகராக இருந்து செயற்பட்ட அவர், ஆரம்பத்தில் சாதாரண பத்திரிகையாளராக தனது வாழ்வைத் தொடங்கி, ஆங்கில மொழியில் நிபுணராக, அரசியலில் அறிஞராக சமூகத்தின் சகல துறைகளையும் கற்றுத் தேர்ந்து இறுதியில் அரசியல் ஆலோசகராக எமது போராட்டத்திற்கு அவர் கிடைக்கப்பெற்றார். அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தமிழீழ விடியலுக்காக அனைவரும் ஒன்றுபட்டு அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி அவரது கனவை நனவாக்குவோம்" என்றும் பா.நடேசன் தெரித்தார். தளபதி கேணல் தீபன் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் தமிழ் இனத்தின் விடுதலைத் தன்மையை சர்வதேசத்தின் மத்தியில் எடுத்துச் செல்வதற்கும் உணர்த்துவதற்கும் பலகாலமாக அளப்பரிய பணியினை ஆற்றியுள்ளார் என்று விடுதலைப் புலிகளின் வடமுனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் தொடர்பாக தனது கருத்துக்களை வெளிப்படுத்திய தீபன் மேலும் தெரிவித்ததாவது: "போராளிகளின் மனச்சுமைகளைப் பகிர்ந்துகொள்வதில் மிகவும் ஆர்வமுடைய ஒருவராகவே பாலசிங்கம் இருந்தார். ஒவ்வொரு இராணுவ வெற்றிகளும் எவ்வாறான அரசியல் பரிமாணங்களைக் கொடுக்கும் என்ற விளக்கங்களையும், அவை பற்றிய ஆழமான கருத்துக்களையும் தெரிவிக்கும் பாலசிங்கம் ஒவ்வொரு சண்டைகளையும் செய்யும் போதும் உற்சாகப்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்குகொண்டவர். அவர் எமக்கு வழங்கும் ஆலோசனைகள் விடுதலைப் போராட்ட இலட்சியத்தின் வெற்றிக்காக வழங்கப்பட்டவையாகவே இருந்துள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக நோய்த் தாக்கத்தின் மத்தியிலும் நீண்டகாலமாக அவர் உழைத்திருக்கின்றார். அவருடைய போராட்டப் பங்களிப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவரின் துணைவியாருக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்றும்" தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் போராட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரையில் ஆற்றிய பணி என்பது மிகவும் மகத்தானது என்று "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் ரவி தெரிவித்துள்ளார். அரசியல் இராஜதந்திரக் களங்களில் தலைவருடன் தோள் கொடுத்து அவர் செயற்பட்டார் எனவும் குறிப்பிட்ட ரவி மேலும் தெரிவித்ததாவது: "பாலா அண்ணனின் அறிவுக் கனலில் இருந்து எம்மால் அவரிடம் பெற்ற விடயங்கள் ஏராளமானவை. அரசியல் மற்றும் பத்திரிகைத் துறை அனுபவங்களும் அளப்பெரிய அளவில் இவரிடம் இருந்து பெறப்பட்டன" என்றும் ரவி மேலும் தெரிவித்தார். யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் ஒரு தீர்க்கதர்சி என்று யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். ஆரம்பத்திலேயே விடுதலைக்கான இயக்கங்கள் எனப் பல இயக்கங்கள் தோன்றிய போதிலும் தமிழீழ விடியலுக்கான சரியான இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்பதை அன்றே இனங்கண்டு விடுதலைப் புலிகளுடன் தனது செயற்பாட்டை இணைத்துக் கொண்டார். இதன் மூலம் அவர் ஒரு தீர்க்க தரிசியாகவே வாழ்ந்தார் என்ற சிறப்பினை உணர்ந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்த இளம்பருதி மேலும் தெரிவித்தாவது: "அவருடைய மறைவு எமது தேசத்திற்கு பாரிய இழப்பாகும். ஆனாலும் அவர் ஊட்டிய சுதந்திர வேட்கை உணர்வு சுதந்திரம் தொடர்பான நம்பிக்கை எங்கள் மத்தியிலும் எங்கள் மக்கள் மத்தியிலும் எங்களுடைய தேசியத் தலைவருடைய முன்னெடுப்பிலும் எங்களை வழிநடத்தும்" என்றும் சி.இளம்பருதி தெரிவித்தார். தளபதி கேணல் ரமேஸ் தமிழ் மக்களின் தேச விடுதலைப் போராட்ட நியாயப்பாடுகளை சர்வதேசத்தின் மத்தியில் வெளிப்படுத்துவதில் அயராது உழைத்தவர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் என்று தளபதி கேணல் ரமேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை நடுவப் பணிமனையில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். நிகழ்வில் பொதுச்சுடரினை மாவட்ட அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சீராளன் ஏற்றினார். தமிழீழ தேசியக் கொடியினை தளபதி கேணல் ரமேஸ் ஏற்றினார். தொடர்ந்து "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை மட்டக்களப்பு மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழக பணிப்பாளர் கேசவன் ஏற்ற, மலர்மாலையை மாவட்ட நீதிமன்ற நீதியாளர் யோகன் பாதர் அணிவித்தார். தொடர்ந்து வணக்க உரைகள் இடம்பெற்றன. நிகழ்வில் சிறப்புரையினை தளபதி கேணல் ரமேஸ் நிகழ்த்தினார். "எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தனது இறுதி மூச்சு வரையில் எமது மக்களின் போராட்ட நியாயப்பாடுகளை சர்வதேசத்தின் முன் வெளிப்படுத்துவதில் தேசத்தின் குரல் அயராது பாடுபட்டவர்" என்று கேணல் ரமேஸ் மேலும் தனது உரையில் தெரிவித்தார்.





