மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவைச் சேர்ந்த மூவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு செங்கலடி சந்தைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. கொல்லப்பட்ட மூவரும் சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் எம்.கோவிந்தன் என்ற பொதுமகனும் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இவர், செங்கலடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.





