வாகரையில் பாதுகாப்பு வலயம் ஏற்படுத்த வேண்டும்: நா.உ. துரைரட்ணசிங்கம் கோரிக்கை மட்டக்களப்பு வாகரையில் ஒரு பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்த அரசாங்கத்தை இணங்கச் செய்ய வேண்டுமென இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடமும் அனைத்துலக சமூகத்திடமும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சிறிலங்காப் படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாகரையில் அகப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு பாதுகாப்பு வலயத்தை வாகரையில் ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வாகரையில் பட்டினியால் வாடும் தமிழ்க் குழந்தைகள், எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வெறுங்கைகளாலும் அரசு சாராத தொண்டர் நிறுவனங்கள் வழங்கிய அலுமினியத் தகடுகளாலும் பதுங்கு குழிகளைத் தோண்டுகிறார்கள். அதேவேளையில் உதவி நிதிகளும் இயந்திரங்களும் கல்லாறு பகுதியில் சிறிலங்கா படை முகாம்களுக்கு அருகில் வாழும் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மனிதாபிமான உதவிகளைப் பெறவும் மருத்துவ சிகிச்சை பெறவும் அகதிகள், கடல் பரப்புகளையும் தாண்டி பல மைல் தூரம் நடக்க வைக்கப்படுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் தங்களது பாரம்பரிய சொந்தக் கிராமங்களில் இருந்து தமிழ் மக்கள் காலத்துக்குக் காலம் சிறிலங்கா இராணுவத்தாலும் சிங்களக் காடையர்களாலும் விரட்டியடிக்கப்பட்டதை நாங்கள் நேரடியாகக் கண்டிருக்கிறோம். அவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பி வர மீண்டும் அனுமதிக்கப்பட்டதில்லை எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். எனவே வாகரையில் இருந்து தமிழ் மக்களை விரட்டியடிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கத்துக்குத் துணை போக வேண்டாம் என அனைத்துலக சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறேன். இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவுடன் இணைந்து வாகரை மக்கள் வாழ்வதற்கான ஒரு பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்தத் தரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.





