சாவை வரவேற்ற சாமன்யர் பாலா ந.வித்தியாதரன் சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணியவேண்டும். அந்தத் துணிவிலும், தெளிவிலும், விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக, நிறைவானதாக அமையும் என்று தாம் முன்னர் உரைத்தபடியே சாவை அரவணைத்தவர் தத்து வாசிரியர் பாலசிங்கம். தமது சாவை நிதர்சனத்தோடு எதிர்கொண்டவர் மதியுரைஞர் பாலசிங்கம்.கடந்த மூன்றுவார காலமாக சாவுத் தேவனை வரவேற்க அவர் திடத்தோடும், தெளிவோடும், முழுப் பிரக்ஞையுடனும் தயாராக இருந்தமையை அக்கால கட்டத்தில் அவரது லண்டன் இல்லத்தில் அவருக்கு அருகில் மிக நெருக்கமாக அமர்ந்திருந்து மனம்விட்டு அவ்வப்போது நீண்ட நேரம் அவருடன் உரையாடியதன் மூலம் நிதர்சனமாக என்னால் உணர்ந்துகொள்ளமுடிந்தது. அவரது வாழ்வின் எஞ்சிய காலம் நான்கு வாரங்கள் முதல் ஆறு வாரங்கள் வரைதான் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருக்கும் அதிர்ச்சித் தகவலை புன்முறுவலோடு என்னுடன் அவர் பகிர்ந்த போதும்கூட சாவின் பயம் அவரை எட்டியதில்லை.சாவுக்கு நான் பயப்படவில்லை. அதன் பாதையில் வரும் நோவுக்குத்தான் அஞ்சுகிறேன் என்று தனக்கே உரிய சொல்லாடலோடு அவர் கூறிச் சிரித்ததை என்னால் சகித்துக்கொள்ளமுடிய வில்லை. சாவுபற்றி அவரது கருத்தை விடுதலை என்ற தமது நூலில் அவர் பதித்துள்ளதை நான் நினைப்பூட்டியபோது அந்தக் கருத்தை ஆங்காங்கே தொட்டு மீண்டும் அவர் வலியுறுத்தினார்.அவரின் தத்துவக் கட்டுரைகள் அடங்கிய விடு தலை நூலில் தத்துவாசிரியரான கைகேடகரை மேற்கோள்காட்டி பாலா எடுத்துரைக்கின்றார். அதையே தமது சாவுப் படுக்கையிலும் அவர் பகிர்ந்துகொண்டார்.தமது மறைவுக்கு முன்னர் சாவுபற்றி அவர் குறிப்பிட்ட அம்சங்கள் சாவுவேளையிலும் அவ ரது கருத்தில் நிலைத்திருந்ததை என்னால் ஆழமாக உணரமுடிந்தது. விடுதலை நூல் ஊடாக அவர் பிரதி பலித்த சாவின் நிதர்சனம் இதுதான்:காலத்தில் முகிழ்கிறது வாழ்வு. பிறப்புக் கும் இறப்புக்கும் இடையே விரியும் காலத்தில் நிலைக்கிறது வாழ்வு. இந்தக் காலம்தான் மனித இருப்பின் எல்லைக் கோட்டை இடுகிறது. இருத் தலின் எல்லைக்கு அப்பால் இல்லாமை இருக் கிறது. இல்லாமையை, அதாவது இருத்தலிலிருந்து இல்லாமல் போவதை, சாவு என்று சொல்கிறான் மனிதன்.காலமும், நிலையாமையும், சாவும் மனித இருத்தலின் மெய்யுண்மைகள்.இருப்பு என்பது காலத்தின் பாதையால் நடை பெறும் பயணம். இந்தப் பயணதில் நான் ஒரு கண மும் தரித்து நிற்கமுடியாதவாறு காலம் என்னை நகர்த்திச் செல்கிறது. நான் காலத்தில் மிதந்துகொண்டு பயணிக்கிறேன். நடந்து முடிந்தது இறந் தகாலமாகவும், நடக்கப்போவது எதிர்காலமாகவும், நடந்துகொண்டிருப்பது நிகழ்காலமாகவும் எனக்குத் தென்படுகின்றன. இறந்தகாலம் செத்துப்போனாலும், எனது அனுபவத்தின் நிழலாக அது என்னை சதா பின்தொடர்கிறது. எனது வாழ்வனுபவம் எப்பொழுதுமே நிகழ் காலமாகவே கட்டவிழ்கிறது. எதிர் காலமானது, இறந்தகாலமாக மாறும் நொடிப் பொழுதுகளாக நான் நிகழ்காலத்தை அனுபவிக்றேன். நிகழ்கால அனுபவமே நிதர்சமானது; மெய்மை யானது. ஆனால், மனிதன் நிகழ் காலத்தில் வாழாமல், எதிர்காலம் பற்றியே சிந்திக்கிறான். மனித ஆசைகளும், எதிர் பார்ப்புகளும், திட்டங்களும் எதிர்காலத்தில் நிறுத்தப்பட்டிருப்பதால், மனித மனமானது எதிர்காலத்தை நோக்கியதாக, எதிர் காலத்தில் நிலைத்துப் போகிறது. செத்துப்போன காலத்தில் புதையுண்டுபோகாமலும், எதிர்காலத் தையே சதா எண்ணிக் கிடக்காமலும், நிகழ்காலத்தில் வாழ்வதுதான் அர்த்தபூர்வ மானது.காலத்தில் நிகழும் எனது பயணம் சாவுடன் முடிவடைகின்றது.நிலையற்ற இந்த உலகில், நிலையான ஒன்று உண்டு என்றால் அதுதான் சாவு. எனது உயிர்ப் பின் கணத்திலிருந்து சாவும் என்னோடு உடன் பிறப்பு எடுத்திருக்கிறது. எனது இருத்தலின் ஒவ் வொரு கணத்திலும் இல்லாமை என்ற சூன்யத்தை நான் எதிர் கொண்டு வாழ்கிறேன். எனது சாவை நான் பட்டறிந்துகொள்ள முடியாது. இந்த உலகில் அதுமட்டும் எனது அனுபவத்திற்கு அப்பாலானது. எனது அனுபவத்தின் முடிவாக, எனது இருத்தலின் முடிவாக, நான் இல்லாமல் போகும் இறுதிக்கணமாகச் சாவு என்னை எதிர்கொண்டு நிற்கிறது. என்னைச் சூழ எங்கும் சாவு நிகழ்கிறது. மற்றவர்களது சாவை நான் நித்தமும் சந்திக்கிறேன். எனக்கு வேண்டியவர்கள், நான் பற்றுக்கொண்டவர்கள் மடியும்போது, துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. மனித இருப்பின் மிகவும் சோகமான, துன்பமான நிகழ்வாக சாவு சம்பவிக்கிறது.எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில், சாவு எனது கதவைத் தட்டலாம். திடீரென, இருப்பிலிருந்து இல்லாமையென்ற சூன்யத்துக்குள் நான் தூக்கிவீசப்படலாம். எனது இருப்பின் நிலையாமை எனக்குத் தெரிந்தும் சாவின் நிச்சயத்து வத்தை நான் உணர்ந்தும் நான் அதுபற்றிச் சிந்திக்கத் துணிவதில்லை. மனித பயங்கள் எல்லா வற்றிற்கும் மூலபயமாக, தலையான பயமாக, மரண பயம் எனது ஆழ் மனக்குகைக்குள் ஒளிந்து கிடக்கிறது. நான் அதை அடக்கி, ஒடுக்கி, என் நனவு மனதிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறேன். சாவு என்பது மனித இருப்பு நிலையின் தவிர்க்கமுடியாத உண்மை என்கிறார் கைகேடகர். அதை மறுப்பதும், அதற்கு அஞ்சுவதும், அதிலிருந்து ஓடி ஒளிந்துகொள்ளமுயல்வதும் அபத்தமானவை. சாவின் பிடியிலிருந்து எவருமே தப்பிவிட முடியாது. அது வாழ்வின் ஒரு நிகழ்வாக என்றோ ஒரு நாள் எதிர்கொள்ளப்படவேண்டியது. சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணியவேண்டும். அந்தத் துணிவிலும், தெளிவிலும், விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்த முள்ளதாக, நிறைவானதாக அமையும். என்று குறிப்பிட்டிருக்கின்றார் பாலா. அதையே தமது சாவுப் படுக்கைக்கான ஆயத்த வேளையிலும் தத்துவத் தெளிவோடு பகிர்ந்துகொண்டார் அந்த மாமனிதர். தம் இறுதிக்காலத்தில் ஊடகவியலாளன் ஒருவனோடு மதியுரைஞர் பகிர்ந்து கொண்ட கருத்துகள் சரித்திரத்தேவை எழும் போது வெளி வரவேண்டியவை.





