வாகரைப் பகுதியிலிருந்து ஆயிரம் பேர் வரை வெளியேறினர் இலங்கையின் கிழக்கேவாகரைப் பகுதியிலிருந்து ஆயிரம் பேர் வரை வெளியேறினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரைப் பிரதேசத்திலிருந்து ஆயிரம் பேர் வரை வெளியேறி, வெலிக்கந்தைப் பகுதியை அடைந்திருப்பதாக, இலங்கை இராணுவம் மற்றும் ஐ நா வின் அகதிகள் மறுவாழ்விற்கான அமைப்பை மேற்கோள் காட்டி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். புண்ணியமூர்த்தி தெரிவித்தார். அவ்வாறு வந்தவர்களை பேருந்துகள் மூலம் வாழைச்சேனைப் பகுதிக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் கூறினார். வாழைச்சேனையிலுள்ள முகாம்கள், அல்லது அங்குள்ள பாடசாலைகளில் அவர்கள் இன்றும் நாளையும் பராமரிக்கப்பட்டு பின்னர் வேறு இடங்களுக்கு நிரந்தரமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அவர்கள் எவ்வாறு வந்தார்கள் என்கிற தகவல்கள் தம்மிடம் இல்லை என்றாலும், ஏ-15 பாதை வழியாக வராமல் வேறு பாதை மூலமாகத்தான் வந்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.





