துணை இராணுவக்குழுவின் முக்கிய உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் முக்கிய உறுப்பினரும் அதன் நிதித்துறைப் பொறுப்பாளருமான இனியபாரதி அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பு பெரிய கல்லாறு மகாவித்தியாலயத்துக்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 மணியளவில் இனியபாரதியும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர். இனியபாரதியும் அவரின் மெய்ப்பாதுகாப்பாளர்களான ராஜன் (வயது 28) மற்றும் குமார் (வயது 26) ஆகிய மூவரும் அக்கரைப்பற்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமின் முக்கிய அதிகாரி ஒருவருடன் உரையாடிவிட்டு சில தொகைப் பணத்துடன் களுவாஞ்சிக்குடிக்கு புறப்பட்ட வேளையில் பெரிய கல்லாறு மகாவித்தியாலயத்துக்கு முன்பாக இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மூவரும் களுவாஞ்சிக்குடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மாலை 5.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனினும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக நேற்றிரவு 7 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினரின் வாகனத் தொடரணியின் பாதுகாப்புடன் பொலநறுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். துணை இராணுவக் குழுவினர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை அடுத்து பெரியகல்லாறு பிரதேசத்தைச் சுற்றிவளைத்த சிறப்பு அதிரடிப்படையினர், அப்பகுதியில் தேடுதல் நடத்தியதுடன் அப்பிரதேச மக்கள் மீது தாக்குதலையும் நடத்தினர். சுமார் ஒரு மணிநேரம் வரை மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்தை சிறப்பு அதிரடிப்படையினர் தடை செய்திருந்தனர்.





