கொட்டாஞ்சேனையில் தமிழ் வர்த்தகர் வெள்ளைவானில் வந்தோரினால் கடத்தல் கொழும்பு, கொட்டாஞ்சேனை பரமானந்த விகாரை மாவத்தையில் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு வெள்ளை வானில் வந்தோரினால் தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இரகசிய பொலிஸாரென கூறிக் கொண்டு வந்த கும்பல் ஒன்றே இந்த வர்த்தகரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது. கொட்டாஞ்சேனையில் நீண்ட காலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த செபமாலை முத்து போல்டன் (வயது -42) என்ற வர்த்தகரே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இக்கடத்தல் சனிக்கிழமை இரவு 7.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவர் தனது வர்த்தக நிறுவனத்தில் இருந்த போது அங்கு வெள்ளை வான் ஒன்று வந்துள்ளது. அதிலிருந்து இறங்கி வந்த நால்வர் இவரை பலவந்தமாக இழுத்துச் சென்று வானில் போட்டுக் கொண்டு சென்றுள்ளார். கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் எவருடனும் எந்தவொரு பிரச்சினையும் இன்றி தனது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இக்கடத்தல் தொடர்பாக மலையக மக்கள் முன்னணிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதி அமைச்சர் ராதா கிருஷ்ணன் இது குறித்து உயர் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். கொழும்பு தலைநகரை அண்டிய பகுதிகளில் அண்மைக் காலமாக 60 பேர் கடத்தப்பட்டிருக்கும் நிலையில் இடைவெளி யொன்றுக்கு பின்னர் 61 ஆவது ஆளாக நேற்று முன்தினம் இந்த வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் 38 பேர் தொடர்பாக எதுவித தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை. கடத்தப்பட்டவர்களில் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன் ஒரு சிலர் கப்பம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, இக்கடத்தல் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் சப் இன்ஸ்பெக்டர் விதான தலைமையில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட போதும் பொலிஸார் மேலதிக தகவல்களை வழங்க மறுத்து விட்டனர்.





