நோர்வேயின் அடுத்த நடவடிக்கை குறித்து இன்று சொல்ஹெய்முடன் பௌர் ஆராய்வார் இலங்கை சமாதான முயற்சிகள் தொடர்பாக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நோர்வே அனுசரணையாளர்கள் இன்று திங்கட்கிழமை ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஒரு வாரத்திற்கும் மேல் தங்கியிருந்த நோர்வேயின் விசேட பிரதிநிதி ஜொன் ஹான்சன் பௌர் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஒஸ்லோ திரும்பியிருந்தார். இன்று அவர் ஒஸ்லோவில், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்து இலங்கை நிலைமைகள் தொடர்பாகப் பேசவுள்ளார். இதன் போது , கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இலங்கையில் தானிருந்தபோது அரச தரப்பினருடனும் விடுதலைப் புலிகளுடனும் தான் நடத்திய பேச்சுகள் தொடர்பாக சொல்ஹெய்முடன் ஆராயவுள்ளார். இலங்கையில் நிலைமைகள் மோசமடைந்து வருகையில் அடுத்து தாங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது இவர்கள் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை பௌரின் இலங்கை விஜயம் எதிர்பார்த்த பலனெதனையும் தரவில்லையென நோர்வே தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வன்னியில் விடுதலைப் புலிகளைச் சந்தித்த பின்னர் பௌர் கொழும்பு திரும்பியதும் அரச சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோஹனவைச் சந்தித்து பேசியிருந்ததும் தெரிந்ததே.





