Sunday, December 10, 2006

வாகரை மாங்கேணியூடாக படையினர் நகர்வு-

2 ஆம் இணைப்பு) வாகரை மாங்கேணியூடாக படையினர் நகர்வு- எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் பலி- 75 பேர் காயம் மட்டக்களப்பு வாகரை நோக்கி மாங்கேணியூடாக படை நகர்வை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சரமாரியான எறிகணைச் சூட்டாதரவுடன் நகர்வை மேற்கொண்ட படையினரின் எறிகணைகள் கண்டலடியில் இடம்பெயர்ந்து வாழும் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது வீழ்ந்து வெடித்தன. இச்சம்பவத்திலேயே 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நேற்று பாற்சேனை மற்றும் வம்மிவட்டவான் பகுதி மீது படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளதால் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாகி உள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் படையினர் வாகரைப் பகுதியை நோக்கி செறிவான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். படையினரின் இத்தொடர் எறிகணைத் தாக்குதல் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் வாகரை மருத்துவமனையில் தஞ்சமடைந்து வருகின்றனர். தொடர்புபட்ட செய்தி: வாகரையில் தொடரும் எறிகணைத் தாக்குதல்கள்: 15 பொதுமக்கள் பலி- 35 பேர் காயம்