நிபந்தனையின்றி ஏ-9,ஏ-15 வீதிகள் திறக்கப்பட வேண்டும்
ஹான்சன் பௌரிடம் தமிழ்ச்செல்வன் வேண்டுகோள்.
யாழ். குடா நாட்டுக்கான ஏ-9 வீதியையும் வாகரைக்கான ஏ-15 நெடுஞ்சாலையையும் நிபந்தனையின்றி திறந்துவிட வேண்டுமென நோர்வே அனுசரணையாளரிடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜொன் ஹான்சன் பௌர் தலைமையிலான நோர்வே தூதுக் குழு நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே அவசரமான விடயங்கள் தொடர்பாக நோர்வே குழுவினரிடம் பிரஸ்தாபித்த தமிழ்ச்செல்வன் ஏ-9 , ஏ-15 வீதிகளை மனிதாபிமான அடிப்படையில் நிபந்தனையின்றி திறந்து விட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இச் சந்திப்பினையடுத்து, ஊடகவியலாளர்களுக்கு தமிழ்ச் செல்வன் பேட்டியளித்தார்.
அதன் விபரம் வருமாறு;
இன்றைய சந்திப்பின் தற்போதுள்ள நிலைமைகள், தேசியத் தலைவரின் கொள்கை உரைக்குப் பின்னால் எழுந்துள்ள சூழ்நிலைகள், எமது தலைமைப் பீடத்தின் நிலைப்பாடுகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கையை அரசு செயலாற்றதாக்கியுள்ளது பற்றியும், நோர்வே அனுசரணையாளர்களின் பணி இலங்கை அரசாங்கத்தால் அழுத்தங்களுக்கும் நெருங்குவாரங்களுக்கும் உட்படுத்தப்பட்டு பல வீனப்படுத்தப்பட்டுள்ள நிலை பற்றி சுட்டிக் காட்டினோம்.
முக்கியமாக, அமைதி முயற்சிகளினதும், யுத்த நிறுத்த உடன்பாட்டின் எதிர்கால விடயங்கள் பற்றியும் அத்துடன் மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பாகவும், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நெருக்குவாரங்கள் தடைகள் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் அவலம் தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்துள்ளோம்.
யுத்த நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் செயலற்றதாக்கியுள்ளது.
உடன்படிக்கையில்உள்ள சரத்தொன்றில் உள்ள அனைத்து விதி முறைகளையும் அரசு மீறியுள்ளது.
சரத்து இரண்டில் மக்களுக்கான இயல்பு நிலையை கொண்டு வருவதும் மக்கள் மீதான நெருக்குவாரங்கள், தடைகளை நீக்குவதையும் அரசு செய்யாமல் அதற்கு மாறாக, எமது மக்கள் மீதான படுகொலைகளையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
சரத்து மூன்றில் கூறப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளை முடக்கி போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளையும் பாதிக்கச் செய்துள்ளது.
யுத்த நிறுத்த உடன்பாட்டின் செயற்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளை சீர்குலைத்து தாக்குதல் அச்சுறுத்தல்களை உருவாக்கி போர் நிறுத்தத்தின் செயற்பாட்டை அரசு முடக்கியுள்ளது. அத்துடன் தமிழர் தாயகம் மீது போர் ஒன்றையும் திணித்துள்ளது.
நோர்வே அனுசரணையாளர்கள் கிளிநொச்சிக்கு வருவதற்கு அரசு விதித்த தடைகள், நெருக்கடிகள் தொடர்பாக எமது கண்டனத்தையும் தெரிவித்திருக்கின்றோம்.
மக்களுக்கான மனிதாபிமானப் பணிகள் சென்றடைவதை தடுக்கும் அரசின் செயற்பாடுகள் பற்றியும் யாழ்ப்பாண, வாகரை ஆகிய இடங்களில் எமது மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடி பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளோம்.
அரசு ஒரு புறம் பேச்சுவார்த்தையெனவும், மறுபுறம் யுத்த முனைப்புகளில் ஈடுபட்டு யுத்த நிறுத்த உடன்பாட்டை இல்லாதொழித்து இராணுவ வழி மூலமான தீர்வைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றது. இதனை சர்வதேச சமூகம் உணர்ந்து அறிக்கைகள், கவலைகள் தெரிவிப்பதை தவிர்த்து அரசின் யுத்தப் போக்கை கண்டித்து அரசின் யுத்த முயற்சிகளை தடுத்து நிறுத்த முயல வேண்டும். அறிக்கைகள் விடுவதன் மூலம் அரசை பணியவைக்க முடியாது.
எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடன்படிக்கையின் படி பாதையை திறப்பதற்கும் மனிதாபிமானப் பணிகள் மக்களைச் சென்றடைவதற்கும் எமது பூரண ஒத்துழைப்பை வழங்க உறுதியளித்துள்ளோம்.
போர் நிறுத்த உடன்படிக்கை என்பது ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட இரண்டு தரப்பினராலும் பேணப் பட வேண்டியதாகும். ஒரு தரப்பு ஒப்பந்தத்தை மீறுகின்ற போது மற்றைய தரப்பு கடைப்பிடிப்பதென்பது அர்த்தமற்றதும், சாத்தியமற்றதுமாகும், அரசாங்கம் உடன்படிக்கையின் ஒவ்வொரு சரத்துகளையும் படிப்படியாக கடந்த ஐந்து வருடமாக எவ்வாறு செயலிழக்கச் செய்து கொண்டிருக்கின்றது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளோம்.
சரத்து ஒன்றில் மோதல்களை நிறுத்தி படுகொலைகள், வன்முறைகளை நிறுத்தியிருக்க வேண்டும்.
ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு வடக்கு, கிழக்கிற்கு வெளியே அனுப்ப வேண்டும். இவற்றை அரசு மீறியுள்ளது.
போர் நிறுத்த உடன்பாட்டை செயற்படுத்தாமைதான் இன்றைய நெருக்கடி நிலை ஏற்பட காரணமாகும்.
பொது இடங்களிலிருந்து படைகள் வெளியேறி மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட வேண்டும். இதனை அரச படைகள் நிறைவேற்றவில்லை. இது சரத்து இரண்டில் கூறப்பட்ட விடயமாகும்.
கேள்வி : பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசு கொண்டு வந்து, போர் நிறுத்த உடன்பாட்டில் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்கின்றது. இது தொடர்பாக தங்களின் நிலைப்பாடு என்ன?
பதில் :- நோர்வே அனுசரணையாளர்கள் இன்றைய சந்திப்பில் அரசு பயங்கரவாத தடைச் சட்டத்தை இன்னும் கொண்டு வரவில்லையென்றும், ஏற்கனவே அமுலில் இருக்கின்ற அவசரகாலச் சட்டம், குடியியல் சட்டம் ஆகியவற்றுடன் மேலதிகமாக இறுக்கமான சரத்துகள் சில சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்ததாக அனுசரணையாளர்கள் இன்று உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், போர் நிறுத்த உடன்பாட்டிற்கு விரோதமாக பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாதென அரசு தெரிவித்ததாக நோர்வே அனுசரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Saturday, December 09, 2006
நிபந்தனையின்றி ஏ-9,ஏ-15 வீதிகள் திறக்கப்பட வேண்டும்.
Saturday, December 09, 2006





