எறிகணைத் தாக்குதல்கள்: 20 பொதுமக்கள் பலி- 40 பேர் காயம்
வாகரைப் பகுதி நோக்கி சிறிலங்காப் படையினர், இன்று சனிக்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 4 வயது குழந்தை உட்பட 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் கல்லாறு, வாழைச்சேனை மற்றும் கரடிக்குளம் முகாம்களில் இருந்து தொடராக வாகரைப் பகுதியை நோக்கி பல்குழல் உந்துகணைத் தாக்குதல் மற்றும் ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளையில், நேற்றிரவு வெருகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பெண் ஒருவர் உட்பட்ட மூவர் படுகாயடைந்திருந்தனர்.
இன்று, வம்மிவட்டவான் மற்றும் பாற்சேனைப் பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களில் குழந்தை ஒன்று உட்பட 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அத்துடன் வாகரைப் பகுதி மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து இன்று முற்பகல் சிறிலங்கா வான் படையினரின் கிபிர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களின் நலன்புரி நிலையங்களை இலக்கு வைத்து தொடர்ந்தும் படையினரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையால் இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இன்றைய தாக்குதலில் படுகாயமடைந்து 20 பேரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் தொடர்பு கொள்ளப்பட்டது.
வாகரை மருத்துவமனைப் பொறுப்பதிகாரி, காயமடைந்தவர்களை கொண்டு செல்ல பாதையை திறந்து விடுமாறு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரியபோதும் பாதுகாப்பு அமைச்சு அதனை மறுத்துள்ளது.
முடிந்தால், காயமடைந்தவர்களை கடல் வழியாக கொண்டு வருமாறு படைத்தரப்பு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தெரிவித்ததாகவும், ஆனால் கடலில் எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதாலும் சிறிலங்கா கடற்படையினரின் பீரங்கிப் படகுகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும் இது சாத்தியப்படவில்லை என்று வாகரை மருத்துவமனை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
Saturday, December 09, 2006
எறிகணைத் தாக்குதல்கள்: 20 பொதுமக்கள் பலி- 40 பேர் காயம்
Saturday, December 09, 2006





