Saturday, December 09, 2006

செஞ்சிலுவைச் சங்க ஊழியர் உட்பட 10 இளைஞர்கள் கடத்தல்

மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினரால் செஞ்சிலுவைச் சங்க ஊழியர் உட்பட 10 இளைஞர்கள் கடத்தல் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு தனியார் பேரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்க ஊழியர் உட்பட 10 இளைஞர்கள், சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் புறப்பட்ட தனியார் பேரூந்து, செங்கலடியை சென்றடைந்த போது அப்பிரதேசத்தில் உள்ள கருணா குழு முகாம் உறுப்பினர்கள் பேரூந்தை வழிமறித்து, 18-30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களை இறக்கி கடத்திச் சென்றனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் செஞ்சோலைச் சங்க கட்டட திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றும் சர்வன் (வயது 26) என்பவரே கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். இளைஞர்களை கடத்திய கருணா குழு உறுப்பினர்களுக்கு 15-20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று பேரூந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர். இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக கருணா குழு அலுவலகத்திற்கு கடத்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது, தாம் யாரையும் கடத்தவில்லை எனவும் அதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தனர். செங்கலடிப் பிரதேசத்தில் இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ள நிலையில் முதற் தடவையாக பட்டடப்பகலில் கருணா குழுவின் முகாமுக்கு முன்பாக அதன் உறுப்பினர்களால் பேரூந்து வழிமறிக்கப்பட்டு 10 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதிமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அண்மையில் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சித்தாண்டிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் ஒருவரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரும் மட்டக்களப்பில் புதிதாக தொடங்கப்பட்ட சர்வதேச தொண்டு நிறுவனத்தின் முச்சக்கர வாகன சாரதியான விக்கி என்பவரும் பட்டப்பகலில் 58-7684 இலக்கமுடைய வெள்ளை நிற ஹயஸ் வான் ஒன்றில் வந்த கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் அண்மையில் அதிகரித்து இக்கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் சிறிலங்கா காவல் நிலையங்களிலோ அல்லது மனித உரிமை ஆணைக்குழுவிடமோ முறைப்பாடு செய்வதில்லை. இதன் காரணமாக தமக்கு கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சரியான விவரங்களைப் பெற முடியாதுள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு காவல் நிலையத்தின் அதிகாரி ஒருவர், கருணா குழுவினரின் அச்சுறுத்தல்களினால் முறைப்பாடு செய்வதில்லை என்றும் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இடம்பெற்று வரும் இக்கடத்தல் சம்பவங்களுக்கு யார் மூல காரணம் என்று இங்குள்ள மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட அச்சம் காரணமாக தகவல்களை வெளியிட மறுத்து வருகின்றனர். puthinam.com