பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் மட்டக்களப்புக்கு விஜயம் வாகரையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்புவது சம்பந்தமாகவும் ஆராய்வதற்காக அமைச்சர்களை உள்ளடக்கிய குழுவொன்று மட்டக்களப்புக்கு நேற்றுக்காலை விஜயம் மேற்கொண்டது. ஜனாதிபதியின் பணிப்பில் சென்ற இக்குழுவில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான அமீர் அலி, சந்திரசேன, பிரதியமைச்சர்களான மேர்வின் சில்வா, வடிவேல் சுரேஷ் ஆகியோர் அடங்கியிருந்தனர். இக்குழுவினர் வாழைச்சேனை காகித ஆலைமுகாமில் மட்டு. மாவட்ட அரச அதிபர், பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இங்கு அமைச்சரும் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் அமீர் அலி தெரிவித்ததாவது:வாகரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக 50 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களின் நடவடிக்கைகளை கவனிப்பதற்கு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் அதிகாரிகள் அங்கு சென்று கடமையாற்றிக் கொண்டு இருப்பதுடன் மக்களின் தேவைகள் பற்றி உடனுக்குடன் அமைச்சருக்கு தெரியப்படுத்துகின்றனர். வாகரைப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுப்பொருள்கள் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பொருள்கள் மிகவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.இக்கலந்துரையாடலில் அரச திணைக்களத் தலைவர்கள், இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.





