எந்த நடவடிக்கைகளையும் இந்தியாவின் உதவி இன்றி மேற்கொள்ளமுடியாது - மகிந்த. நேற்றுக்காலை ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புது டில்லி புறப்பட்ட ஜனாதிபதி சமாதான முயற்சியில் இந்தியாவின் ஆதரவு இன்றி நாம் ஒரு போதும் முன்னேற்றம் காணமுடியாது, எனவே இந்திய விஜயத்தில் அதனை முன்னிறுத்தியே அந்நாட்டுத் தலைவர்களுடன் இம்முறை பேச்சுக்களை நடத்த உள்ளேன் இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. நான் இந்தியாவுக்கு நன்றி உள்ளவன் ஆவேன். அது எமது அயல்நாடு மட்டுமன்றி சிறந்த நண்பனுமாகும், பொருளாதாரத்துறையில் எமக்கு இந்தியாவின் உதவி தேவை. அதேபோன்று சமாதானப் பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் அதன் ஆதரவு அவசியம். அந்நாட்டின் பங்களிப்பின்றி சமாதான முயற்சியில் ஒரு போதும் முன்னேற்றம் காண முடியாது என்றார். இந்தியாவுக்கு அவர் விஜயம் செய்யும் போது அங்கு அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கும் தகவல் குறித்துக் கேட்டபோது அது ஒரு வகையில் நல்லது. நான் எனது வாழ்க்கையில், பல எதிர்ப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் சந்தித்துள்ளேன். அவை ஒருவருடைய சக்தியை அதிகரிக்கும். வேண்டுமானால் ஆர்ப்பாட்டம் செய்பவர்களுடன் நானும் சேர்ந்து கொள்வேன். என்றார். தமிழ் நாட்டில் உள்ள சில அரசியல் தலைவர்கள், எல்லாத் தமிழ்மக்களும் புலிகள் அல்லர் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.இந்தியத் தலைவர்களுடன் நான் நடத்தவுள்ள கலந்துரையாடல்களின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதனை வலியுறுத்திச் சொல்வேன். தமிழர்களை இந்தியாவுக்குத் தப்பி ஓடு வதற்குப் பலவந்தப்படுத்தி அதன் மூலம் இந்தியாவில் ஒரு நெருக்குதல் நிலையைத் தோற்றுவிக்கத் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம் தென் இந்தியாவில் அகதிகள் பிரச்சினையை பெரும் விவகாரமாக்குவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால், இது விடயத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு உள்ளது. இந்தியா ஏழாயிரம் தொன் உணவுப் பொருள்களை எமக்குத் தந்து உதவுதற்கு முன்வந்துள்ளது. அந்தப் பொருள்களை விநியோகிப்பது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்வது வருகிறோம். இதேவேளை வியாழக்கிழமை இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனனுடன் நடத்திய கருத்துப் பரிமாற்றங்கள் மிகவும் பய னுள்ளவையாக அமைந்தன. கடற்பகுதியில் இந்திய இலங்கைக்கூட்டு ரோந்து சேவைகளை நடத்துவது குறித்து இந்தியத் தலைவர்களுடன் நான் பேசவுள்ளேன்.கடற்புலிகள் சக்திமிக்க கடற்படையான உருவெடுத்து வருகின்றனர். அவர்கள் சிறி லங்காவுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் உலகத்துக்குமே பெரும் அச்சுறுத்தலாக உள்ளார்கள். கூட்டுக் கடல் ரோந்து செய்வதன் மூலம் ஆயுதக் கடத்தல்களையும் போதைப் பொருள் கடத்தல்களையும் கட்டுப்படுத்த முடியும் என நாம் நம்புகின்றோம். கடந்த சில வாரங்களில் இந்திய மீனவர்களின் ட்றோலர்களை விடுதலைப்புலிகள் தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காகப் பறிமுதல் செய்திருக்கின்றனர். கடற்புலிகளின் அச்சுறுத்தல் குறித்து இரு தரப்புகளும் உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். உத்தரப்பிரதேசத்தின் தெஹ்ராடன் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் ஆசிய மேயர்கள் மாநாட்டில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பங்கேற்கிறார். செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்லும் அவர், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் பேச்சு நடத்துவார். இம்மாதம் 29ஆம் திகதி அல்லது 30ஆம் திகதி அவர் கொழும்பு திரும்புவார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு இரண்டாவது தடவையாக விஜயம் செய்கிறார்.





