Sunday, November 26, 2006

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு இன்றேல் அடுத்த மாவீரர்...

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு இன்றேல் அடுத்த மாவீரர் தின உரை யாழ்ப்பாணத்தில் .- செ.கஜேந்திரன். எமது மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் விரைவில் நாம் தமிழீழத்தை அமைப்போம். எமது கொடி ஐ.நாவில் பறக்கும். படையினர் உடனடியாக வடக்கு கிழக்கை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் நாம் வெளியேற்றுவோம். இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் வடக்கு கிழக்கில் இரண்டு பாரிய துறைமுகங்கள் உள்ளன. அந்தத் துறை முகங்கள் எமது மக்கள் வாழ்வதற்கு எந்த வகையிலும் உதவவில்லை. திருமலை மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்கள் கடற்படையினர் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட கடற்பரப்பை தம் வசப்படுத்தவும் மீன்பிடித் தொழிலைத்தடைசெய்யவும் கடற்படையினர் இந்தத்துறைமுகங்களைப் பயன்படுத்துகின்றனர். மீன்பிடித் தொழிலைப்பாதிப்படையச் செய்து மக்களை பட்டினியில் போடுகின்றது அரசு. இந்த நிலையைத் தொடர விடாது இதை உணர்ந்து அரசு நல்ல சுமுக நிலையை உருவாக்க வேண்டும். உங்கள் இராணுவப்பலத்தை மாத்திரம் நம்பி எமது மக்களை இந்தத் துறைமுகங்களின் ஊடாக நசுக்க முற்பட்டால் அது அரசிற்குப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். வடக்கு கிழக்கில் ஒவ்வொரு நாளும் தமிழர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறான மனித உரிமை மீறல்களை அரசு சர்வதேச சமூகத்திற்கு காட்டாது அவற்றை மறைத்து சர்வதேசத்திடமிருந்து பணத்தைப்பெற்று தமிழர்களையே கொலை செய்கிறது. எமது மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்குவது மகிந்த ராஜக்ஸவின் காலத்தில்தான். தமிழர்கள் பலம் தமிழர்கள் கையில்தான் இருக்கவேண்டும். அந்தப் பலம் எம்மிடம் நிறையவே உள்ளது. அதை நாம் ஒரு போதும் இழக்கமாட்டோம். நீங்கள் எந்தத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தாலும் எமது இராணுவப் பலம் எம்மோடு இருக்கக்கூடியதான தீர்வாக அமையவேண்டும். அப்படி இல்லாது விட்டால் தனிநாடு உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. அரச படையினர் எமது மண்ணில் மேற்கொண்டு வரும் அட்டூழியங்களுக்கு அளவேயில்லை. உரிமைக்காகப் போராடும் ஓர் இனத்திடம் இந்த அட்டூழியம் நிலைக்காது. எமது மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க அரசு முன் வரவேண்டும். அப்படி இல்லாது போனால் மிகவிரைவில் வடக்கு கிழக்கில் தமிழீழத்தை உருவாக்குவோம். இப்போது வடக்கு கிழக்கில் இடம் பெறுகின்ற நிலைமை தொடர்ந்தால் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி எமது தேசியத்தலைவர் யாழ்ப்பாணத்திலிருந்து மாவீரர் தின உரையை நிகழ்த்துவார். வடக்கு கிழக்கு எங்கும் எனது புலிக்கொடி பறக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.