ஊடகத்துறையை நவீனமயப்படுத்துவதாக கூறும் அரசால் ஏன் ஊடகவியலாளர் படுகொலையை தடுக்க முடியவில்லை -கேள்வி எழுப்புகிறார் மாவை சேனாதிராஜா ஊடகத்துறையை நவீனமயப்படுத்துவதாக கூறும் அரசாங்கம் ஏன் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மறுக்கின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சபையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் வியாழன் நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் தகவல், தொழில் நுட்ப அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் பேசும் போதே மாவை சேனாதிராஜா எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; "ஊடகத்துறையை நவீன மயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவதை தடுக்க இந்த அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் ஏன் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை? அது நவீன முறையிலும் சரி, சாதாரண முறையிலும் சரி. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்கவென ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்து அதன் மூலம் குறிப்பிட்ட 15 சம்பவங்களை மட்டும் விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், ஏன் இந்த ஆணைக் குழுவில் எந்த ஊடகவியலாளர்கள் கொலைச் சம்பவமும் இணைக்கப்படவில்லை? யாழ்ப்பாணத்தில், பத்திரிகையாளர்கள் தொலைபேசியில் பேச அஞ்சுகிறார்கள். பத்திரிகை விநியோகம் செய்ய பயப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் "நமது ஈழநாடு" பத்திரிகை அதன் ஆசிரியர் சிவமகாராஜா சுட்டுக் கொல்லப்பட்டதுடன் பின்னர் மூடிக் கிடக்கிறது. "உதயன்" பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு ஊழியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். உதயன் பத்திரிகை ஊழியர்கள் கொல்லப்பட்டதன் பின்னர், இங்கு அரச பேச்சாளர்கள் புலிகளே கொன்று விட்டதாக கூறினர். அதேபோல் எனது வீட்டுக்கு அருகிலிருந்த மாணவர்கள் சிலரை கைது செய்து விட்டு அவர்களை புலிகள் என்கிறார்கள். நல்ல வேளை இறுதியில் விடுதலை செய்து விட்டனர். சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் எழுதும் தமிழ் ஊடகவியலாளர்கள் தமிழ் மக்களின் நியாயங்களை எழுதுவதற்காக கொல்லப்படுகிறார்கள். ஊடகவியலாளர் டி. சிவராம் ஆங்கிலத்தில் தமிழரின் நியாயத்தை எடுத்துக் கூறியதற்காக கொலை செய்யப்பட்டு இந்த பாராளுமன்றத்துக்கு அருகிலேயே தூக்கியெறியப் பட்டிருந்தார். பேனா முனை எல்லாவற்றிலும் விட கூர்மையானது என்றிருக்க, ஆனால் அதைவிட துப்பாக்கி முனையே பெரியதென இராணுவ ஆட்சி இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லை. இங்கு யாருக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பதற்கு பதிலில்லை. திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் முன்னாள் எம்.பி.யான ஜோசப் பரராஜசிங்கம் கொல்லப்பட்டமைக்கு காரணகர்த்தாக்களை கூறினோம். உதயன் பத்திரிகை அந் நிறுவனத்தின் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதியிடம் நேரடியாக கூறி இருந்தும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ் ஊடகவியலாளர்கள் காரணமில்லாமல் கொல்லப்படுகிறார்கள். தமிழர் விடுதலைக்காக அவர்கள் பாடுபட்டு எழுதுவதுதான் அவர்கள் செய்த தவறா? இவை ஒரு புறமிருக்க புலிகளை ஜனநாயக வழிக்கு வரச் சொல்லி விட்டு "புலிகளின் குரல்" வானொலி கோபுரத்தின் மீது விமானத் தாக்குதல் நடத்துகின்றன இதை சர்வதேச அமைப்புகள் கூட கண்டித்திருந்தன. ஊடகவியலாளர்களை கொலை செய்பவர்கள் பாதுகாப்பாக வெளிநாட்டில் சென்று தங்கியிருக்க இங்கு வழி இருக்கிறது. ஆனால் ஊடகவியலாளர்களை பாதுகாக்க இங்கு வழியில்லை. எனவே, இனியாவது ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இல்லாமல் சுதந்திரமாக இயங்க பாதுகாப்பான சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.





