Saturday, November 25, 2006

கொட்டாஞ்சேனை, மட்டக்குளி பகுதிகளிலிருந்து 2 தமிழ் ...

கொட்டாஞ்சேனை, மட்டக்குளி பகுதிகளிலிருந்து 2 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக முறைப்பாடு கொழும்பில் கொட்டாஞ்சேனை மற்றும் மட்டக்குளி பகுதியில் வைத்து இரு தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு - 15 மட்டக்குளியில் வைத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை, தொழில் நுட்ப கல்லூரி மாணவனொருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த தம்பிராசா கமலகாந்த் (21 வயது) என்ற மாணவனே கடத்திச் செல்லப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவிலேயே இவர் மட்டக்குளி பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திலும் மக்கள் கண்காணிப்புக் குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேநேரம், கடந்த திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில், கொட்டாஞ்சேனையில் கராஜ் ஒன்றில் பணிபுரியும் இளைஞனொருவர் வெள்ளை வானொன்றில் வந்த ஆறு பேரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நாவாந் துறையைச் சேர்ந்த பீற்றர் றேகன் (23 வயது) என்பவரே கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.