Saturday, November 25, 2006

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண மனப்பூர்வமாக அரசு...

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண மனப்பூர்வமாக அரசு விரும்பினால் வட, கிழக்கை இணைக்க வேண்டும் -சபையில் பிரேரணையை சமர்ப்பிக்க சுரேஷ் வலியுறுத்தல் அரசாங்கம் உண்மையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பினால், உயர் நீதிமன்ற தீர்ப்பினால் இரண்டாகப் பிரிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களை சபையில் பிரேரணையொன்றை கொண்டு வருவதன் மூலம் மீண்டும் இணைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் சபையில் நேற்று வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு - செலவுத் திட்டக் குழு நிலை விவாதத்தில் பேசும்போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; "1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இனப் பிரச்சினையை தீர்க்கவென மாகாண சபைகள் முறை கொண்டு வரப்பட்டது. இதற்காக இந்திய - இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் உட்பட ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மற்றும் ஜே.வி.பி.யினர் போன்றோரும் எதிர்த்தனர். ஆனாலும், மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டு அதில் அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டதன் பின்னர், மாகாண சபைகளை `வெள்ளை யானைகள்' என விமர்சித்தவர்கள் இன்று அதிலேயே உறுப்பினர்களாக இருக்கின்றனர். இன்று பாராளுமன்றத்தில் 91 அமைச்சுகள் இருக்கின்றன. மாகாண சபைகளுக்கு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளபோது இந்த அமைச்சுகள் எதற்கு? அப்படி அமைச்சுகள் வேண்டுமென்றால் எதற்காக மாகாண சபைகள் இயங்குகின்றன. உண்மையில் இங்குள்ள அனைவரும் அதிகார பரவலாக்கல் முறைபற்றி என்ன கருத்துகளை கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவில்லை. ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு மூலம் தீர்வு காண முடியாது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும். மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது போன்று பாசாங்குக் காட்டிவிட்டு மீண்டும் அவற்றைப் பறித்துக் கொண்டார்கள். இந்தநிலையில் நாம் எப்படி அரசை நம்புவது? இதேவேளை, இனப் பிரச்சினைக்கு அதிகார பகிர்வு மூலம் தீர்வு காண தாங்கள் இணங்கி வரவில்லையென ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்திருந்தார். எனினும், ஜே.வி.பி. அதிகார பகிர்வு முறைக்கு இணக்கம் தெரிவித்தமைக்கான சான்று தன்னிடமிருப்பதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண கூறுகிறார். இதேநேரம், இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி மூலம் தீர்வு காண முடியாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் அரச தரப்பு சமாதான பேச்சுக் குழுவுக்கு தலைமை தாங்கி சென்றவருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதிகார பகிர்வே இதற்கு ஏற்புடைய மார்க்கமாக அமையுமென அவர்கள் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றனர். ஆனால், அரசாங்கம் ஒற்றையாட்சியை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. மாகாண சபைகளுக்கு குறைந்தபட்ச அதிகாரங்களைக்கூட வழங்காத அரசாங்கம், ஒற்றையாட்சி முறையில் அதிகாரத்தைப் பகிர்ந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த இடமளிக்குமா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தன்னை `ருஹுணு புத்திரன்' என கூறுகிறார். அவர் தெற்கிலிருந்து வந்ததால் அவருக்கு அதில் பெருமை இருக்கலாம். அவ்வாறெனின் வே.பிரபாகரனுக்கு ஏன் தன்னை `ஈழ புத்திரன்' என்று கூற முடியாது? அதிலென்ன தவறு இருக்கிறது? சிறிய விடயங்களையும் கூட அரசாங்கம் பெரிது படுத்திவிடுகிறது. ருஹுணு பல்கலைக்கழகம், வயம்ப கல்லூரி என்றெல்லாம் அழைக்க முடிந்தபோது ஈழப் பல்கலைக்கழகம் என்று அழைக்கமுடியாதுள்ளது. இது என்ன நியாயம்? அரசாங்கம் இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் முரட்டுத்தனமான பிடிவாதத்தில் இருக்கிறது. அரசு தொடர்ந்தும் பிடிவாதம் பிடித்தால் நிலைமை கடினமாகிவிடும். இருநாடுகளுக்கு இடையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இன்று வரை மாகாண சபைகள் இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்கள் 18 வருடங்களின் பின்னர் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவொரு பாரிய தவறாக கருதி சபையில் பிரேரணையொன்றை கொண்டு வருவதன் மூலம் அரசாங்கத்திற்கு இவ்விரு மாகாணங்களையும் மீண்டும் இணைக்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதால் அவர்கள் இதற்கு ஆதரவு வழங்குவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். இதுகுறித்து ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேசி இணக்கத்தை ஏற் படுத்தவும் நாம் தயாராகவுள்ளோம். ஆனால், அரசு அவ்வாறான எந்த நடவடிக்கைகளையும் எடுத்தாக தெரியவில்லை. அரசு உண்மையில் பிரச்சினையைத் தீர்க்க விரும்பினால் கடந்த 18 வருடங்களாக ஒன்றாக இருந்த வடக்கு - கிழக்கை மீண்டும் இணைக்க செயற்படவேண்டும். இதைச் செய்து நம்பிக்கையை வளர்க்க வேண்டும். உயர் நீதிமன்றம் பிரிக்க தீர்ப்பு வழங்கினாலும், அரசு இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்பிக்கை ஏற்படாது. இதேவேளை, தொண்டமனாறு முதல் காங்கேசன்துறை வரை, அதாவது யாழ்.குடாநாட்டின் மூன்றிலொரு பங்கு இராணுவ கட்டுப்பாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயமென பிரகடனப்படுத்தப்பட்டு அங்கு நல்ல நிலம், பாடசாலை, உட்பட பல ஸ்தாபனங்கள் இயங்காமல் கிடக்கின்றன. பெற்றோர் நிலங்களைக் கொடுத்து தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் சிக்கல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தையும் இராணுவம் வைத்துக் கொண்டு மீள்குடியமர்த்துவதென்பது சாத்தியமாகுமா? கேட்டால் பாதுகாப்புக்காகத் தான் இவ்வளவும் என்கிறார்கள். யாருக்கு பாதுகாப்பு? மக்களுக்கு பாதுகாப்பில்லாவிட்டால் அந்த இராணுவம் எதற்கு? யாழ்.குடாநாட்டில் 6 இலட்சம் பொது மக்களும் 60 ஆயிரம் துருப்பினரும் உள்ளனர். படையினர் மக்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு, மக்களை விரட்டி விடுகின்றனர். இதிலென்ன நியாயம், தர்க்கம் இருக்கிறது. எம்மால் அரசுடன் தான் பேச முடியும். நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும், ஜனாதிபதியுடன் பேசியும் இதுவரை வாகரை மக்களுக்கு உணவுப் பொருட்கள் சென்றடையவில்லை. மக்களுக்கு உணவு கோரினால் படை நகர்வு மேற்கொள்கிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை இந்த நாடு தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டுமெனின் அரசாங்கத்தினர்தான் சிந்தித்துச் செயற்படவேண்டும்" என்றார்.