குடாநாட்டில் வைரஸ் காய்ச்சலால் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு -யாழ். ஆஸ்பத்திரியில் யுவதி மரணம் யாழ்ப்பாணத்தில் மிக வேகமாகப் பரவிவரும் `சிக்குன் குனியா' அறிகுறிகளை ஒத்த புதியவகை வைரஸ் காய்ச்சல் காரணமாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வலிகாமம் பகுதிகளிலேயே இந்நோய்த் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், இணுவில் பகுதியில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வகைக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இதேவேளை, இத்தகைய வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவதி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளார். ஊரெழுவைச் சேர்ந்த கனகலிங்கம் சர்மிளா (வயது 23) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இத்தகைய ஆபத்தான வைரஸ் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படுவோர் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் போதிய மருந்துகளின்றி பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காய்ச்சலுக்கு பனடோல், பரசிற்றமோல் போன்ற மருந்துகளை உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் கூறுகின்ற போதும், மருந்தகங்கள் எவற்றிலும் இவற்றைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் இவற்றின் விலை பல மடங்கு அதிகரித்த நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன.





