Saturday, November 25, 2006

பசிக் கொடுமையால் 6 பிள்ளைகளின் தாய் மரணம்

வாகரையில் பசிக் கொடுமையால் 6 பிள்ளைகளின் தாய் மரணம் மட்டக்களப்பு, வாகரை நலன்புரி நிலையத்தில் பசிக் கொடுமையால் ஆறு பிள்ளைகளின் தாயொருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். மூதூர் கிழக்கு சந்தனவெட்டை என்ற இடத்தைச் சேர்ந்த இவர், அங்கு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்து வாகரை நலன்புரி நிலையத்தில் தனது ஆறு பிள்ளைகளுடன் தங்கியிருந்தார். கடந்த சில தினங்களாக உணவெதுவும் உட்கொள்ளாத நிலையில் வியாழக்கிழமை மயக்கமுற்ற இவர் வாகரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். உடனடியாக இவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டுமென வாகரை ஆஸ்பத்திரியில் தெரிவிக்கப்பட்டது. எனினும் `ஏ-15' பாதை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் நிலையில் இது சாத்தியப்படாது போகவே அவர் வாகரை ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். வி.பொன்னம்மா (60 வயது) என்பவரே பசிக் கொடுமையால் உயிரிழந்தவராவார். வாகரைக்கு கடந்த ஒன்றரை மாதமாக எதுவித உணவுப் பொருட்களும் அனுப்பப்படாததால் சுமார் ஐம்பதாயிரம் மக்கள் இங்கு பசி, பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.