தமிழக முதல்வர் கருணாநிதியுடன் இலங்கை நிலைவரம் குறித்து நாராயணன் ஆராய்வு சிவசங்கர் மேனனும் பங்கேற்பு இலங்கை நிலைவரம் குறித்து தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியுடன் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரும் பிரதமர் மன்மோகன் சிங்கின் விசேட பிரதிநிதியுமான எம்.கே. நாராயணன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இச்சந்திப்பில் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் கலந்துகொண்டார். இலங்கையில் வட, கிழக்கில் தமிழ்மக்கள் பாதிக்கப்படுகின்றமை குறித்தும் வட, கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படுவதில் ஏற்ப்பட்டுள்ள இழுபறிநிலை தொடர்பாகவும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பியிருந்த வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் வட, கிழக்கு பிரச்சினை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கருணாநிதிக்கு எடுத்துக் கூறியதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





