ஏ9 பாதையினை திறக்க மகிந்த நிர்ப்பந்திக்கப்படுவார் வை.கோவிடம் மன்மோகன்சிங் உறுதி. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான ஏ 9 வீதியை திறக்குமாறு சிறி லங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்துவேன் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலாளர் வைகோவிடம் உறுதியளித்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று புதுடில்லியில் வைகோவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போதே ஏ 9 வீதியை திறக்குமாறு வலியுறுத்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின்போது இலங்கையில் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்கள் குறித்து வைகோ எடுத்துக்கூறியுள்ளார். ஏ 9 வீதி மூடப்பட்டுள்ளமையினால் யாழ்ப்பாணக்குடாநாட்டு மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்குவது குறித்தும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாகவும் வைகோ பிரதமருக்கு எடுத்து விளக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.





