இலங்கை அதிபர் தலைமையில் ஆசிய மேயர்கள் மாநாடு: தமிழக மேயர்கள் புறக்கணிப்பு
இலங்கை அதிபர் ராஜபக்ஷே தலைமையில் நடைபெறும் ஆசிய மேயர்கள் மாநாட்டில் தமிழக மேயர்கள் கலந்துகொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள டேராடூன் நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆசிய மேயர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த மேயர்கள் சுமார் 40 பேர் கலந்துகொள்கின்றனர்.
இம்மாநாட்டை இலங்கை அதிபர் ராஜபக்ஷே தலைமை தாங்கி துவக்கி வைக்கிறார். ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மேயர்களும் கலந்துகொள்ளக் கூடாது என்று பாமக கோரிக்கை விடுத்திருந்தது.
இதனிடையே, தமிழக மேயர்கள் வெள்ள நிவாரணப் பணி மற்றும் சொந்த வேலை காரணமாக ஆசிய மேயர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, மதுரை, சேலம் ஆகிய மாநகராட்சிகளில் திமுகவைச் சேர்ந்த மேயர்களும், கோவை, திருச்சி மாநகராட்சிகளில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர்களும் பதவி வகிக்கின்றனர்.
மழை வெள்ளம் காரணமாக நிவாரணப் பணிகள் தொடர்பான வேலைகளை கவனிக்க இருப்பதால் மேயர்கள் மாநாட்டிற்கு வர இயலாது என்று சென்னை, நெல்லை, மதுரை, சேலம் மேயர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோல், திருச்சி மேயர் சாருபாலா கூறுகையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருப்பதால் மேயர்கள் மாநாட்டிற்கு வர இயலாது என்றார்.
கோவை மேயர் வெங்கடாச்சலம், மாநாகராட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் மேயர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.
Friday, November 24, 2006
இலங்கை அதிபர் தலைமையில் ஆசிய மேயர்கள் மாநாடு:
Friday, November 24, 2006





