அதிகாரப் பகிர்வுக்கு ஜே.வி.பி. இணக்கம் தெரிவித்தமைக்கு `பதிவு' ஆதாரம்
-சபையில் அமைச்சர் திஸ்ஸ விதாரண அறிவிப்பு
இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு காண்பதற்கு சர்வகட்சி மாநாட்டில் ஜே.வி.பி. பிரதிநிதி, கலாநிதி வசந்த பண்டா இணக்கம் தெரிவித்தமைக்கான பதிவு தம்மிடம் இருப்பதாக சர்வகட்சி மாநாட்டுத் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வாய் மூல விடைக்கான வினாக்களின் பின்னர் விசேட கூற்றை வெளியிட்டு உயைாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;
"கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜே.வி.பி. கட்சியின் பிரதிநிதியாக கலாநிதி வசந்த பண்டா கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரப் பரவலாக்கலே சிறந்த முறையெனவும் அது தொடர்பாக நாம் இந்தியா சென்று பஞ்சாயத்து முறைகள் குறித்து ஆராய்ந்த விடயங்களையும் கூறினேன்.
இதற்கு ஈ.பி.டி.பி. கட்சி பிரதிநிதி தவராஜா உட்பட அனைவரும் ஆதரவளிப்பதாகக் கூறினர். மக்களுக்கு சிறந்த பலன் கிடைக்குமாகவிருந்தால் தாமும் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக ஜே.வி.பி. பிரதிநிதியான கலாநிதி வசந்த பண்டா கூறினார்.
நான் அதிகாரப் பகிர்வு குறித்து தனித்தனியாக ஒவ்வொரு கட்சிப் பிரதிநிதியிடமும் அவர்களின் நிலைப்பாட்டை கூறுமாறு கேட்டேன். அவர்கள் தெரிவித்த கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜே.வி.பி. பிரதிநிதி கலாநிதி வசந்த பண்டா அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவித்த கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வகட்சி மாநாடு 17 தடவைகள் நடந்துள்ளன. இதில் 16 தடவைகள் ஜே.வி.பி. கட்சியின் சார்பாக கலாநிதி வசந்த பண்டாவே கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், அதிகாரப் பகிர்வுக்கு தமது கட்சி பிரதிநிதி இணங்கவில்லையென விமல் வீரவன்ஸ கூறுகின்றார்.
இது தவறானது.
அதிகாரப் பகிர்வு குறித்து பல்வேறு கட்சிகளும் பல கருத்துகளை முன்வைத்துள்ளன. அதிகாரத்தை எவ்வாறு பகிர்வதென்பது குறித்து ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். அதிகாரப் பகிர்வு மூலமே எமது நாட்டை அரித்துக் கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
எனவே, ஜே.வி.பி. உட்பட அனைவரிடமும் பொது இணக்கப்பாட்டிற்கு வந்து செயற்படுமாறு வேண்டுகிறேன். அவ்வாறானால்தான் புலிகளுக்கு சர்வதேச ரீதியாக அழுத்தம் கொடுக்க முடியும்."
Friday, November 24, 2006
அதிகாரப் பகிர்வுக்கு ஜே.வி.பி. இணக்கம் தெரிவித்தமைக்கு ...
Friday, November 24, 2006





