விவசாயக் கல்லூரி மாணவர் படுகொலை தொடர்பாகவவுனியாவில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது -5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு வவுனியா தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஐவரின் படுகொலை தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அன்று இரவு இவர் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனின் வாசஸ்தலத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலையடுத்து விவசாயக் கல்லூரிக்குள் நுழைந்த படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் 11 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து சி.ஐ.டி.யினர் மற்றும் வவுனியா குற்றவியல் பொலிஸார் உள்ளிட்ட பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதி விளக்கமறியலில் இவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். வவுனியா சிறைச்சாலையில் சந்தேக நபரை வைப்பதற்கு போதிய பாதுகாப்பு இல்லையானால் இவரை பாதுகாப்புடன் அநுராதபுரத்திற்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அடுத்த மாதம் 5 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடைபெறும். அந்த நேரத்தில் வவுனியா நீதிமன்றுக்கு சந்தேக நபர் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





