Friday, November 24, 2006

பொறுமை காக்க கற்றுக்கொள்ளுமாறு இந்தியாவுக்கு..

பொறுமை காக்க கற்றுக்கொள்ளுமாறு இந்தியாவுக்கு இலங்கை தெரிவிக்கும் அரசியல் தீர்வுக்கு' அவசரப்படுத்த வேண்டாமென ஜனாதிபதி கேட்டுக் கொள்வார்? இந்தியாவுக்கான விஜயத்தை நாளை சனிக்கிழமை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பின்போது அரசியல் தீர்வை துரிதமாக மேற்கொள்ளுமாறு இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டாமென விநயமாக கேட்டுக் கொள்வாரென ஐ.ஏ.என். எஸ்.செய்திச் சேவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்களுக்கு சுயாட்சிப் பகிர்வை வழங்குமாறு இந்தியா தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்று எட்டப்படும் கட்டத்தில், அது தனியே விடுதலைப்புலிகளுடன் மட்டுமல்லாது ஏனைய தமிழ் அமைப்புகளையும் உள்ளடக்கியதாகவே இருக்குமென ஜனாதிபதி ராஜபக்‌ஷ, இந்திய அரசியல் தலைமைத்துவத்துக்கு தெரிவிப்பாரென எதிர்பார்க்கப்படுவதாக ஐ.ஏ.என்.எஸ்.மேலும் குறிப்பிட்டிருக்கிறது. சகல தரப்புகளையும் உள்ளடக்கி அவற்றைத் திருப்திப்படுத்தும் ஏற்பாடுகளை மேற்கொள்ள காலம் எடுக்கும் எனவும் இதற்கு மாதங்கள், வருடங்கள் செல்லுமெனவும் அதனால், கொழும்புக்கு இது தொடர்பாக நெருக்குவாரம் கொடுக்கக் கூடாதெனவும் டில்லிக்கு கூறப்படும். இன நெருக்கடி விவகாரத்தை கையாளும் சர்வதேச ரீதியில் பங்களிப்பை வழங்குவோர் போன்று கொழும்பு இந்தியாவை கருதவில்லையெனவும், அத்துடன் அதிகாரப் பகிர்வு, சமஷ்டி என்பன தொடர்பாக நெருக்குவாரங்களால் கொழும்பு களைப்படைந்துவிட்டதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கும் அதேசமயம், இன நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசியல் தீர்வொன்றை துரிதமாக காண வேண்டிய தேவை குறித்து இந்தியா திரும்பத் திரும்ப (அநேகமாக இதனை தனிப்பட்ட ரீதியில்) கூறி வருகிறது. தமிழ் மக்களின் நியாயபூர்வ அபிலாஷைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும். இதனை இலங்கை நிறைவேற்றாவிடின் மோசமான அழிவுகள் ஏற்படுமென இந்திய உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் ஐ.ஏ.என்.எஸ்.ஸுக்கு கூறியிருக்கிறார். ஒரு வருட கால இடைவெளியில் இரண்டாவது தடவையாக நாளை சனிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். உத்தராஞ்சல் மாநிலத்தில் தெஹ்ராடூனில் இடம்பெறும் மேயர்கள் மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை அவர் ஆரம்பித்து வைக்கிறார். பின்னர் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்திக்கிறார். 29 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார். இதேவேளை, கடந்த காலத்தில் அரசியல் தீர்வென்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சமூகத்தில் செல்வாக்கு செலுத்தும் உயர்மட்டக் குழுவினரின் செயற்பாடுகளிலிருந்து விலகிச் சென்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ராஜபக்‌ஷவின் நிர்வாகம் முயற்சிப்பதாக இந்தியாவுக்கு தெரிவிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. `செல்வாக்கு செலுத்தும் செயற்பாடு'கள் உடனடியான விளைவை ஏற்படுத்தும் என்றாலும் அது நீடித்து நிலைக்காது என்று அந்த வட்டாரங்கள் விபரித்தன. வலிமை வாய்ந்த குழுவினரென்றாலும், நாம் விடுதலைப்புலிகளுடன் மட்டும் இணக்கப்பாட்டுக்கு செல்ல மாட்டோம். ஏனைய தமிழ் குழுக்கள் மற்றும் சமூகங்களையும் இந்த நடவடிக்கைகளில் சம்பந்தப்படுத்துவோம் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. சிங்கள மேட்டுக்குடியின் ஒரு பிரிவினருடன் மட்டும் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இவர்கள் எவ்வளவு தூரம் மேற்கு நாடுகளினதும் தமிழ்த் தரப்பில் ஒரு பிரிவினரினதும் ஆதரவைப் பெற்றிருந்தாலும் அவர்களுடன் மட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வது பயனளிக்காது. இந்தியா இதனை விளங்கிக் கொள்ள வேண்டும், ஆதரவளிக்க வேண்டும். சில மேற்கு நாடுகள் மேற்தட்டு வர்க்கத்தினர் செல்வாக்கு செலுத்தும் இணக்கப்பாட்டுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. அது போன்றில்லாமல் இந்தியா வித்தியாசமாக இப்பிரச்சினையை பார்க்க வேண்டும் என்று அந்த வட்டாரங்கள் கூறின. தற்போதைய அரசாங்கம் சிங்கள தேசியக் கட்சிகளான ஜே.வி.பி., ஹெல உறுமய போன்றவற்றில் தங்கியிருப்பதால் தமிழ் மக்கள் தப்பான அபிப்பிராயத்தை கொண்டிருக்கின்றனர். இந்திய நிர்வாகத்தில் ஒரு சாராரும் ஜே.வி.பி.யை நாசகார சக்தியாகவே நோக்குகிறது. தேவையான இனக்கப்பாட்டுக்கு அக்கட்சி முன்வராதென்றே கருதப்படுகிறது. இதேவேளை, இலங்கை நிலைவரம் தொடர்பாக ராஜபக்ஷ எதனைக் கூறப்போகிறார் என்பதை இந்திய தலைமைத்துவம் கேட்பதற்கு விரும்புவதாக இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் மோதலை நிறுத்தி பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டுமென இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால், இது நடைபெறும் என்பதை சிலர்தான் நம்புகின்றனர் என்றும் ஐ.ஏ.என்.எஸ்.செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.