Thursday, November 23, 2006

இலங்கை ஜனாதிபதி- இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி- இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு (BBC Tamil) இலங்கை மனிதாபிமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் சிவ் ஷங்கர் மேனன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. நேற்று பின்னிரவு இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, இலங்கை வந்திருக்கும் இந்தியத் வெளியுறவுச் செயலர் சிவ் ஷங்கர் மேனன், இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து விரிவான பேச்சுக்களை நடாத்தியிருக்கிறார். இந்தச் சந்திப்புக் குறித்த விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை எனினும் இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள், மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமைகள், மற்றும் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து இந்தியாவின் கரிசனையையும், நிலைப்பாட்டையும் இந்திய வெளியுறவுச் செயலர் இலங்கை அதிபரிடம் எடுத்துக்கூறியதாக கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று காலை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எம். திவாரட்ண, நிதி அமைச்சின் செயலர் பி.பி.ஜயசுந்தர, வெளிநாட்டமைச்சின் தற்காலிகச் செயலர் போன்றோரையும், பாதுகாப்புத்துறைச் செயலர் கோட்டாபய ராஜபக்க்ஷ, சமாதான செயலகப் பணிப்பாளர் கலாநிதி பாலித கொஹன்ன மற்றும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க போன்றோரை தனித்தனியாக சந்தித்த இந்திய வெளியுறவுத் துறைச்செயலர், சிவ் ஷங்கர் மேனன், இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வன்முறைகள் குறித்தும், அதனுடன் இணைந்த விடயங்கள் குறித்தும் விரிவாகப் பேசியிருப்பதாகத் தெரியவருகிறது. இது குறித்து செய்தி வெளியிட்ட இலங்கை வெளிநாட்டமைச்சக வட்டாரங்கள், சமாதான முயற்சிகள் குறித்த தற்போதைய நிலைப்பாடுகள் குறித்து இந்திய வெளியுறவுத் துறைச்செயலர் இலங்கை அதிகாரிகளுடனும், அரச பிரதிநிதிகளுடனும் இன்று விரிவாகக் கலந்துரையாடியதாகவும், இவரது விஜயம் இவ்வார இறுதியில் இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் விஜயம் குறித்த முன்னேற்பாடுகளை உத்தியோகபூர்வமாக உயர்மட்டத்தில் மேற்கொள்ள உதவியுள்ளதாகவும் தெரிவித்தன.