குடாநாட்டுக்கு அனுப்புவதற்காக வவுனியா தபாலகத்தில் தேங்கிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான தபால் பொதிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அனுப்புவதற்காக வவுனியா பிரதம தபாலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் பொதிகள் நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கின்றன. குடாநாட்டுக்கான தரை வழிப்பாதை மூடப்பட்டுள்ளதால் அங்கு உணவுப் பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டு பசி,பஞ்சம், பட்டினி நிலையேற்பட்டுள்ளது. இதனால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோர் குடாநாட்டிலுள்ள குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு தபால் பொதிகளில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு தபால் பொதிமூலம் குடாநாட்டுக்கு அனுப்புதற்காகவே வவுனியா பிரதம தபாலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதிகள் நீண்ட நாட்களாக கிடப்பதாக பிரதம தபாலதிபர் மு.இராமச் சந்திரன் தெரிவித்தார். திருகோணமலையிலிருந்தே கப்பல் மூலம் இந்தப் பொதிகள் குடாநாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. எனினும், கடந்த சில வாரங்களாக இந்தப் பொதிகள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருகோணமலை பிரதம தபாலகத்தில் தபால் பொதிகள் மலைபோல் குவிந்து சீரழிகின்றன. சோதனையென்ற பெயரில் பொதிகளைப் படையினர் வெட்டிக் கிழித்து அவற்றை, அரை குறையாகப் பொதிசெய்தும் இந்தப் பொதிகளைப் பாதுகாப்பாக வைக்கக் கூடிய இடவசதி தபாலகத்தில் இல்லாததாலும் பலத்த மழையில் இவை நனைந்ததாலும் பெருமளவு பொருட்கள் மிக மோசமாகப் பழுதடைந்து துர்நாற்றம் வீசுகின்றன. இந்த நிலையில் திருகோணமலைக்குப் பொதிகளை அனுப்புவதற்காக வவுனியா பிரதம தபாலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதிகள் தொடர்ந்தும் தேங்கிக் கிடக்கின்றன.





