Thursday, November 23, 2006

பாம்பன் கடலில் தமிழக மீனவர் மீது சூடு இருவர் படுகாயம்;

பாம்பன் கடலில் தமிழக மீனவர் மீது சூடு இருவர் படுகாயம்; இராமேஸ்வரத்தில் பெரும் பதற்றம் இராமேஸ்வரம் பாம்பன் கடற்பரப்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதனால் நேற்று இராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் மீனவர்கள் கடும் சீற்றமடைந்துள்ளனர். பாம்பனிலிருந்து படகொன்றில் சென்று நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீதே அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கண் மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நடுக்கடலில் பெருமளவு படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், அனைவரையும் உடனடியாக கரை திரும்புமாறு எச்சரிக்கவே, மீனவர்கள் அச்சத்தால் தங்களது வலைகளை படகுகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு கரையை நோக்கி படகுகளை செலுத்தியுள்ளனர். எனினும், திடீரென கடற்படையினர் கண் மூடித்தனமாகச் சுட்டதில் படகொன்றிலிருந்த இரு மீனவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கரைக்கு கொண்டு வரப்பட்டு ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் இராமேஸ்வரம் பகுதியெங்கும் பெரும் பதற்றம் நிலவுகிறது. மீனவர்கள் கடும் சினமடைந்துள்ளனர். பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டினுள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.