எங்களுடைய தமிழ்த்தேசியத்தை எதிரிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் தளபதி கேணல் ரமேஸ் எங்களுடைய தமிழ் தேசியத்தை ஒரு போதும் எதிரிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் இவ்வாறு தளபதி கேணல் ரமேஸ் அவர்கள் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரகாவியமான மாவடி முன்மாரிகோட்ட மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்:- தேசியத் தலைவருடைய சிந்தனையில் போராட்ட வாழ்வில் பக்கபலமாக நின்று உழைத்து சரித்திரமாகிப்போன மாவீரர்களைப் பெற்றெடுத்த நீங்கள் கதறத் தேவையில்லை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சாவு என்பது நிச்சயம், ஆனால் உங்களுடைய பிள்ளைகள் சாகவில்லை சரித்திரமாகி விட்டார்கள். அவர்கள் எங்களுடைய உள்ளங்களில் ஒவ் வொரு நாளும் பூசிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களைப் பெற்றெடுத்த வீரத்தாய்மார்களை நாங்கள் கௌரவிக்க கடமைப்ப ட்டவர்கள் அந்த வகையிலே நாங்கள் இன்று உங்களைக் கௌரவிக்கின்றோம் என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில் :- இலங்கை சுதந்திரமடைந்த பிற்பாடு மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைவர்கள் இலங்கைத் தீவை ஒரு சிங்கள பௌத்த தேசமாக பிரகடனப்படுத்தும் வகையில் தமிழ் மக்களிடையே உரிமைகளையும் சுதந்திரங்களையும் அழித்து ஒரு பாரிய அளவிலான இன அழிப்பு படுகொலையை மேற்கொண்ட காலப்பகுதியில் இருந்து தமிழ் மக்கள் சுதந் திரமாகவும் தமிழர்களுக்கு என்று ஒரு தேசம் உருவாக வேண்டும் என்றும் எதிரியின் போர்களம் சமரில் நேருக்கு நேர் நின்று தங்களுடைய உடம்பில் குண்டுகளை தாங்கி எதிரிபடையை விரட்டி அடித்து மக்களின் உரிமை மீட்புக்காகப் போராடி வீரச்சாவடைந்த இவர்கள் சரித்திரமாகி விட்டார்கள். எனவே மாவீரர்கள் கார்த்திகை 27ல் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் எங்களுடைய உள்ளத்தில் பூசிக்கப்பட வேண்டியவர்கள் எனவே மாவீரர்களை பெற்றெடுத்த தாய்மார்களே ஏனைய மக்களே சிறிலங்கா அரசு எதிர்வருகின்ற காலங்களில் எம்முடைய தேசம் மீது நடத்தவிருக்கும் ஒரு பாரிய தாக்குதலை எதிர் கொண்டு சிங்கள படையை அழித்து ஒழிக்க வேண்டியது தமிழர்களின் தலையான கடமையாகும் என்றார்.





