கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலனுக்கு அரச தரப்பிலிருந்து நெருக்கடி? போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ் டொற்ரியருக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் கருத்துகளால் அரசு தரப்பு விசனமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் ஒரு பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக அரசு தரப்பினர் குற்றச்சாட்டுகளை சுமத்திவரும் நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சிகளிலும் அரசு தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கண்காணிப்புக் குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் உல்வ் ஹென்றிக்சன் இருந்தபோது, ஹெலனின் கருத்துகள் தொடர்பாக அரச தரப்பினர் அவரிடம் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த நிலையில், தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஹெலன் நாடு திரும்ப கண்காணிப்புக் குழுவின் பேச்சாளராக தோர்பினூர் ஓமர்சன் நியமிக்கப்பட்டார். எனினும், கடந்த இரு வாரத்திற்கு முன்னர், மீண்டும் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளராக ஹெலன் நியமிக்கப்பட்டார். அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு வெளியிடும் கருத்துகளால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஹெலன் மீது தனது பார்வையைத் திருப்பியுள்ளதால் அவருக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





