குடாநாட்டிலுள்ள 60 ஆயிரம் இராணுவத்தினருக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி உணவு அனுப்புகிறது அரசாங்கம் * பொதுமக்களுக்கு ஏன் இல்லையென மகேஸ்வரன் கேள்வி குடாநாட்டிலுள்ள 60 ஆயிரம் இராணுவத்தினருக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி உணவுப் பொருட்களை அனுப்பி வரும் அரசினால் ஏன் அங்குள்ள 6 இலட்சம் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க முடியாதென ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றில் திங்கட்கிழமை இடம் பெற்ற வரவு- செலவுத்திட்டவிவாத்திலேயே இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் கூறியதாவது; "மகிந்த ராஜபக்ஷவின் ஒராண்டு ஆட்சியில் தமிழ் மக்களுக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன. இதில் உச்ச அநீதியாக யாழ். குடாநாட்டு மக்கள் பட்டினி போடப்பட்டுள்ளனர். கடந்த 97 நாட்களாக 6 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உணவின்றி பட்டினியில் வாடுகின்றனர். மகிந்தவின் ஆட்சிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சாதுரியமான இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குடாநாட்டில் மாணவர்களின் கல்வி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகளின்றி பாடசாலைகள் உள்ளன. மாணவர்கள் வீதிகளில் நடமாட அச்சப்படுகின்றனர். தினமும் பல மாணவர்கள் கடத்தப் படுகின்றனர். படுகொலை செய்யப்படுகின்றனர். அரசு குடாநாட்டுக்கு உணவு அனுப்ப முடியாதென உறுதியாகக் கூறினால் அம்மக்களுக்கு நாம் இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுக்கத் தயாராயிருக்கிறோம். எமது கட்சி உறுப்பினர்கள் விரைவில் குடாநாட்டுக்கு செல்லவுள்ளனர். முல்லைத்திவிற்கு சென்று புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்கப் போவதாகவும் மதிப்பு மிக்க சமாதானத்தை கொண்டு வரப் போவதாகவும் தேர்தல் காலத்தில் கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று மதிப்பு மிக்க யுத்தமொன்றையே கொண்டு வந்துள்ளார். மகிந்தவின் வரவு- செலவுத்திட்டத்தை பற்றி எமக்கு கவலையில்லை. குடாநாட்டு மக்கள், வாகரை மக்களைப் பற்றியும் அவர்களின் பட்டினி நிலை தொடர்பாகவும் தான் எமக்கு கவலை. குடாநாட்டில் இராணுவம், பொலிஸாரால் கைது செய்யப்படுவோர் விடுவிக்கப்படுவதில்லை. வெள்ளைவானில் திரிவோர் வீடு, வீடாக சென்று ஆட்களைக் கடத்துகிறார்கள், தினமும் படுகொலைகள் இடம் பெறுகின்றன. வாகரையில் 48 ஆயிரம் மக்கள் அவதிப்படுகின்றனர். அரசு இடம் பெயர்ந்த அம் மக்களுக்கு என்ன உதவிகளை வழங்கியுள்ளது. பல்குழல் பீரங்கிகளைப் பயன்படுத்தி சிறுவர்கள் உட்பட பல பொதுமக்களை படுகொலை செய்கிறீர்கள். அகதி முகாம்களைக் கூட விட்டு வைக்கவில்லை. 130 பேரைக் கொன்றதற்காக ஈராக் ஜனாதிபதிக்கு மரண தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இந்த வருடத்திற்குள் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கை பிரித்ததன் மூலம் எரியும் நெருப்பில் ஜனாதிபதி எண்ணெய் வார்த்துள்ளார். இப்பகுதி ஆளுநர்களாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அரசு எதனை செய்ய முற்படுகின்றது. எமது தமிழ் உறுப்பினர்களை படுகொலை செய்கிறீர்கள். இன்னும் செய்ய விருக்கிறீர்கள். எனவே, இவ்வாறான படுகொலைகளை நிறுத்தி தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை வழங்குங்கள். ரவிராஜ் எம்.பி.யின் படுகொலை தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. விசாரணைகளில் அரசாங்கம் நேர்மையுடன் செயற்படவில்லை."





