Wednesday, November 22, 2006

தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு அங்கீகாரம் பெறப்படும்

சர்வதேச சமூகத்தின் உதவியுடன் வாக்கெடுப்பு நடத்தி தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு அங்கீகாரம் பெறப்படும் * பாராளுமன்றத்தில் தமிழ்க் கூட்டமைப்பு அறிவிப்பு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட தமிழ் பேசும் மக்களிடையே வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டுமென்ற விடயத்தை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு செல்லவுள்ளதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தமிழருக்கான சுதந்திரத்தை வழங்குவதன் மூலமே இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றைக் காண முடியுமெனவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: தமிழர் தாயகப் பகுதிகளில் நாம் ஆட்சி செய்தவர்களென்ற வகையில் எமது இறைமை எம் மக்களிடமே உள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதை விடுத்து இராணுவ பலத்தைக் கொண்டு தமிழரை அழிக்க நினைத்தால் அது விடுதலைப் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும். கண்டியத் தலைவர்கள் கூட வட, கிழக்கை தமிழர்களின் தாயகமாகவே அங்கீகரித்தனர். ஆனால், இங்கு தமிழ்த் தேசிய இனத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழர்களின் தாயக பிரதேசத்தில் எமது பாரம்பரியத்தை நிலைநாட்டுவதற்காக வாக்களிப்பு நடத்தப்படல் வேண்டுமென சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு செல்வோம். 50 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் சிங்கள - தமிழ் இனங்களுக்கிடையிலான அமைதி வழிப் போராட்டங்கள் இராணுவ ரீதியில் அடக்கப்பட்டதாலேயே தமிழ் இளைஞர்கள் தமது இனத்தை பாதுகாக்க ஆயுதமேந்திப் போராடத் தொடங்கினர். இவ்வாறு பல நாடுகளில் ஆயுதப் போராட்டங்கள் நடந்தன. இங்கெல்லாம் ஐ.நா. தலையிட்டு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றுள்ளன. 39 நாடுகளில் கிட்டத்தட்ட 27 நாடுகள் சுதந்திரமும் பெற்றுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் இலங்கை அரசுடன் தமிழ்த் தலைவர்கள் செய்து கொண்ட எந்த ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்படவில்லை. நம்பிக்கை நாணயமற்ற வகையில் பேரினவாத அரசுகள் ஒப்பந்தங்களை நிராகரித்து விட்டு தமது பௌத்த சிங்கள இராணுவத்தை தமிழ் மக்கள் மீது ஏவி விட்டுள்ளன. இந்த நாட்டில் சிங்கள, பௌத்த ஒற்றையாட்சியை ஏற்படுத்துவதே அதன் நோக்கம். அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான இஸ்ரேல் பலஸ்தீனம் மீதும் லெபனான் மீதும் ஒப்பந்தங்களை மீறி மக்களை அழிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. அதேபோல் தான் இங்கும் அரசு ஒப்பந்தங்களை மீறி தமிழரை அழிக்கின்றது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் மட்டுமே படையினர் ஈடுபடுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். மாவிலாறில் என்ன நடந்தது? செஞ்சோலையில், வாகரையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் என்ன நடந்தது? வவுனியாவில் 5 மாணவர்கள் இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், மங்கள சமரவீர தமது இராணுவம் ஒழுக்கமுள்ளதெனக் கூறுகின்றார். மூதூரில் பிரான்ஸ் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த 17 பேர் படுக்க வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் இலங்கை இராணுவத்தினர் தொடர்பாக மங்கள சமரவீர கூறும் ஒழுக்கமா? நூற்றுக்கு நூறு வீதம் சிங்களவர்களைக் கொண்டுள்ள இலங்கை இராணுவத்தை இனப்படுகொலை செய்கின்ற இராணுவத்தை தமிழ்த் தேசியம் எவ்வாறு நம்ப முடியும்? நீங்கள் நேர்மையானவர்களாக, ஜனநாயகத்தை நேசிப்பவர்களாக இருந்தால் தமிழர் பிரதேசங்களை நிர்ணயிப்பதற்கு தமிழ் பேசும் மக்களிடையே ஒரு வாக்கெடுப்பை நடத்துங்கள். இது தொடர்பாக நாம் சர்வதேசத்திடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம். யாழ்ப்பாண மக்களை பட்டினி போட்டு வைத்துள்ளீர்கள். உங்கள் பாதுகாப்புக்கு யாழ். மக்களை பயன்படுத்துகிறீர்கள். நாம் அரசுக்கு வரி செலுத்துபவர்கள். இந் நாட்டின் பொருளாதாரத்தின் அத்திவாரமே தமிழர்கள் தான். உணவு அனுப்புங்களென நாம் உங்களிடம் கெஞ்சவில்லை. உரிமையுடன் தான் கேட்கிறோம். தர முடியாவிட்டால் எம்மை தனித்து செல்லவிட்டு விடுங்கள். எமது மக்களை பட்டினி போட்டு, குண்டுகளை வீசி, இனப்படுகொலை செய்து அடக்கி விடலாமென நினைக்காதீர்கள். எமது மக்கள் தமது உயிருள்ள விநாடி மட்டும் தமது உரிமைக்காகப் போராடுவார்கள். வடக்கு, கிழக்கின் கடற்கரையோரம் முழுவதும் பாதுகாப்பு வலயம். அதியுயர் பாதுகாப்பு வலயமென தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை, பொருளாதாரத்தை அழித்துள்ளீர்கள். குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயமென்ற பெயரில் எவ்வளவு நிலப்பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளீர்கள். 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் விதவைகள் உள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். வெளிநாடுகளுக்கும் அகதிகளாகச் சென்றுள்ளனர். தமிழர் பிரதேசத்தில் எத்தனை சிங்கள குடியேற்றங்கள்? நில அபகரிப்புகள், 13 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவில் 5 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவு வரையில் அபகரித்து விட்டீர்கள். 20 வருட காலபோரினால் எமது எதிர்கால சந்ததியான சிறுவர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறுவர்களுக்காக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு இராணுவ வெற்றிகளுக்காக தமிழ் மக்களின் சொந்த மண்ணில் படைக்குவிப்பை செய்து மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இணைத்தலைமை நாடுகள் நியாயமான தீர்வொன்றை எடுக்குமென்ற நம்பிக்கை எமக்குள்ளது.