Wednesday, November 22, 2006

இந்திய பல்கலைக்கழகங்களில் 40 இலங்கையருக்கு---

இந்திய பல்கலைக்கழகங்களில் 40 இலங்கையருக்கு புலமைப்பரிசில் 2007/2008 ஆம் கல்வியாண்டுக்கான பல்வேறுபட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு இலங்கையர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 40 இலங்கையர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கவுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. இதன்படி, பல்வேறுபட்ட பட்டப்படிப்புகளை பல்வேறுபட்ட பல்கலைக்கழகங்களில் மேற்கொள்வதற்கு இலங்கை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் ஆலோசனைப்படி இளம் திறமையான இலங்கையர்களை இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவு செய்யவுள்ளது. இப் புலமைப்பரிசிலுக்கு தகுதியான தகைமையுள்ளவர்களிடமிருந்து வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கல்வி நடவடிக்கைகளுக்கான கட்டணம் மற்றும் உணவுக்கான படி என்பன மாதாந்தம் பட்டப்படிப்பு தரத்திலுள்ளோருக்கு இந்திய ரூபாப்படி 3,600 வழங்கப்படும். அத்துடன், இருப்பிட கட்டணமாக 3,000 ரூபா மாதாந்தம் வழங்கப்படுவதுடன், வருடாந்த புத்தக மற்றும் கல்விக்கான வேறு செலவுக்கென 3,600 ரூபா வழங்கப்படும். மேலும், சுகாதார சேவை மற்றும் ரயிலின் முதல்தர வகுப்புக்கான கட்டணத்தை இந்தியா வழங்குவதுடன், கல்விச் சுற்றுலாவுக்கென வருடாந்தம் 2,000 ரூபா வழங்கப்படுவதுடன் வேறு பல சலுகைகளும் வழங்கப்படும். புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள் இந்திய உயர் ஸ்தானிகரகத்தின் கல்விப் பகுதியுடனோ அல்லது கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுடனோ தொடர்பு கொள்ள முடியும். மேலும் 3 ஆம் திகதி வர்த்தமானியிலோ அல்லது www.moe.gov.lk என்ற இணையத்தள முகவரியிலோ இது தொடர்பாக தெரிந்து கொள்ள முடியும்.