Wednesday, November 22, 2006

சிவ் சங்கர் மேனன் இன்று வருகிறார்

சிவ் சங்கர் மேனன் இன்று வருகிறார் மகிந்த, ரணில் திங்கள் புதுடில்லியில் இலங்கை நிலைமைகள் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்து வரும் இந்திய அரசு தற்போதைய நிலைவரங்களை ஆராயும் வகையில் வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனை இன்று புதன்கிழமை கொழும்புக்கு அனுப்பி வைக்கின்றது. இந்திய வெளியுறவுச் செயலாளர் இங்கு வருகை தரும் அதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கான விஜயத்தை எதிர்வரும் சனிக்கிழமை மேற்கொள்ளவிருக்கின்றார். நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சனிக்கிழமை தெஹ்ராடுன்னில் நடைபெறவிருக்கும் இந்திய மாநகர மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கின்றார். இங்கு சிறந்த ஆட்சி குறிதது இந்திய மேயர்கள் மத்தியில் அவர் கருத்துகளை தெரிவிக்கவிருக்கின்றார். இந்த மாநாட்டின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதுடில்லி செல்வார். அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்வரும் திங்கட்கிழமை புதுடில்லி விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கின்றார். தென்னிலங்கையின் இரண்டு பிரதான அரசியல் தலைவர்கள் ஒரே சமயத்தில் புதுடில்லியில் இந்தியத் தலைவர்களை சந்திப்பது முக்கியத்துவம் மிக்க விடயமாக அரசியல் அவதானிகள் மத்தியில் கருதப்படுகின்றது. இதேவேளை, இன்று மாலை கொழும்பு வருகை தரவிருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் நாளை வியாழக்கிழமை அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தவிருப்பதாகவும் நாளை மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் ஒன்று கூடலில் பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒன்று கூடலின்போது பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வர் என தூதரக வட்டாரம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுச் செயலாளர் கொழும்பில் தங்கும் காலத்தில் வடக்கில் இடம்பெறும் நிலைமைகளையிட்டு விரிவாக ஆராயவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்விதமாக புதுடில்லியில் இலங்கைத் தலைவர்கள் இந்தியத் தலைவர்களை தனித்தனியே சந்திக்கவிருப்பதாகவும் தற்போதைய இலங்கையின் அரசியல் நிலைமைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்படலாமெனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னர் மேற்கொள்ளும் இரண்டாவது இந்திய விஜயம் இதுவாகும். ஜனாதிபதியாக பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் அவர் முதலாவது இந்திய விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.