Tuesday, November 21, 2006

துரோகக் கும்பல்களே ஊரைவிட்டு கிளம்புங்கள்

துரோகக் கும்பல்களே ஊரைவிட்டு கிளம்புங்கள்-தமிழ் மாணவர் ஒன்றியம் குடாநாட்டு மக்களின் துன்ப துயரங்களுக்கு துணைபோகும் துரோகக் கும்பல்கள் ஊரைவிட்டு கிளம்புவதே தமிழ் மக்களுக்கு செய்கின்ற பெரிய உபகாரமாக இருக்கும். ஏன தமிழ் மாணவர் ஒன்றியம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்கள் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எச்சில் எலும்பு எங்களுக்கு வேண்டாம் ! எமது மக்களின் துயர் தோய்ந்த வாழ்வு தொடர்ந்தும் நீடிக்கின்றது. பட்டினியும், அரச பயங்கரவாதமும் தமிழ் மக்களை பாதாளத்தில் தள்ளி விட்டிருக்கின்றது. அடுப்படியில் பூனை படுக்க அவலப்பிடியில் மக்கள் துடிதுடிதுடிக்கின்றனர். படைகள் புரியும் கொலைகள் குலை நடுங்க வைக்க வெள்ளைவான்களில் எங்கே போகின்றோம். எதற்காக போகின்றோம் என்ன நடக்கிறது. எமது சடலத்தை எங்கே எமது பெற்றோர்கள் கண்டு எடுக்கப்போகின்றார்கள் எனக் கதறும் இளைஞர்களும், ஆணுறுப்பும், கண்களும், காதுகளும், மூக்கும் வெட்டப்பட்டு முண்டமாக்கப்பட்ட உடலைப் பொறுப்பேற்று உறவினர்கள் கதறிழும் மரண ஓலமும் சுடுகாடெங்கும் இருந்து எழுகின்ற புகைமண்டலங்கள் குடாநாடெங்கிலும் தூபமிட அவலமும், அகலாத அச்சமும் குடிகொண்டு வாழும் குடாநாட்டு மக்களுக்கு விடிவின் எல்லையே தெரியவில்லை. இந்நிலையில் பயங்கரவாதத்தை புரிகின்ற பாதுகாப்பு படைகள் என்று கூறிக்கொண்டிருக்கும் படைகளும் அவர்களை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும். ஒட்டுக் குழுவான ஈ.பி.டி.பி யும் என்பதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஒட்டுமொத்த மக்களும் நன்கறிவர். பொதுமக்கள் அமைப்புக்களும், அரச உயர் அதிகாரிகளும், தொண்டு நிறுவனத்தினரும் இவ்வுண்மையை நன்கறிந்திருந்தும் தம் உயிருக்கு அஞ்சி வாய் பொத்தித்திரிகின்றனர். இந்நிலையில் ஈ.பி.டி.பி யின் தலைவர் துரோகி டக்கிளஸ் தேவானந்தா குடாநாட்டுக்கு விஜயம் செய்திருப்பது மிகுந்த அச்சத்தை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. அவலத்தை தருகின்ற அரச பயங்கரவாதிகளின் குசினி மூலையில் அமர்ந்திருந்து எச்சில் எலும்பை சுவைத்துக்கொண்டிருந்த டக்கிளஸ் தமிழ் மக்களுக்கு விடிவைத்தருவார் என்று ஒரு போதும் நம்ப முடியாது. மாணவர்களின் பிரச்சினைகளில் அக்கறை உள்ளதைப்போல் காட்டி அறிக்கை விடுத்துள்ள டக்கிளஸின் கருத்துக்கள் மேன்மேலும் மாணவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டி நிற்கின்றது. பசியோடு படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பாடசாலை சென்று பொம்மைகளாக போலிக்கற்றல் செய்யும் மாணவர்களாகிய எமது உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து அறியக்கூட அவரால் முடியாது. அதற்கு அவரது விசுவாசமுள்ள எசமான் மகிந்தவும் அவரது கூலிப்பட்டாளங்களும் இடம்கொடுக்காது என்பது உண்மை. என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.