தமிழ் கூட்டமைப்பின் எம்.பி.க்களின் செயற்பாடு குறித்து சபாநாயகர் அதிருப்தி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை பாராளுமன்றில் நடந்து கொண்ட விதம் தமக்கு கவலையளிப்பதாகத் தெரிவித்த சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார, இது தொடர்பான தனது அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டார்.
பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியதன் பின்னரே தனது அதிருப்தியை வெளியிட்ட சபாநாயகர் மேலும் கூறியதாவது;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த சனிக்கிழமை சபையில் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பங்கள் இடம்பெற அனுமதிக்கமாட்டேன். கடும் நடவடிக்கை எடுப்பேன்.
எனது ஆசனத்தை உடைக்க முயற்சித்தனர். தமது உடைகளைக் களைந்தனர். இவ்வாறான செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இனிவரும் நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
சபாநாயகரின் இக்கூற்றையடுத்து அரசாங்கம் மற்றும் ஜே.வி.பி. எம்.பி.க்கள் மேசைகளில் தட்டி ஆரவாரம் செய்தனர்.
சபாநாயகரின் கூற்றுக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், உங்கள் கூற்றை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், நாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள். அம்மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவது எமது கடமை என்றார்.
Tuesday, November 21, 2006
தமிழ் கூட்டமைப்பின் எம்.பி.க்களின் செயற்பாடு குறித்து---
Tuesday, November 21, 2006





