Tuesday, November 21, 2006

யுத்த முழக்கமிடும் ஜனாதிபதியும் சமாதான முழக்கமிடும்

யுத்த முழக்கமிடும் ஜனாதிபதியும் சமாதான முழக்கமிடும் ரணிலும் எதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டனர்? * ஐ.தே. கட்சி எம்.பி.மகிந்த விஜேசேகர யுத்தமுழக்கமிடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சமாதான முழக்கமிடும் ரணிலும் ஏன் ஒப்பந்தம் செய்து கொண்டனர் என ஐ.தே.க.பாரளுமன்ற உறுப்பினர் மகிந்த விஜேசேகர கேள்வி யெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி யெழுப்பிய அவர் மேலும் கூறியதாவது; "தனிப்பட்ட ரீதியில் நான் இந்த வரவு- செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டேன். ஆனால், எனது கட்சி தீர்மானத்தை மதிக்கிறேன். இனப்பிரச்சினைக்கு ஈழம் தீர்வாக அமையாது. ஆனால், ஒரு நாட்டிற்குள் அதிகார பகிர்வு மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். பயங்கரவாதம் தோற்கடிக்கபட வேண்டும். ஆனால், அவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். வீரவிலவில் இடம் பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி யுத்தம் சார்பாக பேசியுள்ளார். ரணில் சமாதானம் பற்றி பேசுகிறார். பிரபாகரனின் மாவீரர் தின உரையில் யுத்த அறிவிப்பு வெளியிடப்படுமா என்றும் கருதப்படுகிறது. அப்படியானால், இரு பிரதான கட்சிகளுக்குமிடையில் செய்யப்பட்ட உடன்படிக்கைக்கு என்ன நடக்கப்போகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சபையில் ஆடைகளை களைவதனை ஏற்க முடியாது. அதேவேளை, தேரர்களுக்காக ஆசனங்களில் வெள்ளைத் துண்டு விரிப்பதையும் சபாநாயகர் வரும் போது அவர்கள் எழுந்து மரியாதை கொடுக்காது அமர்ந்திருப்பதையும் ஏற்க முடியாது. சபாநாயகருக்கு மரியாதை கொடுக்க முடியாவிட்டால் தேரர்கள் விகாரைகளுக்கு சென்று விட வேண்டும். ஏ-9 வீதியை வைத்துக் கொண்டு அரசாங்கம் என்ன செய்கின்றது என்பது புரியவில்லை. இணைத்தலைமை நாடுகளுக்கு பயந்து வீதியை திறக்க வேண்டியதில்லை. அதேவேளை, யாழ். மக்களைப் பட்டினிபோடும் உரிமையும் எமக்கில்லை. அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை நாம் அனுப்பி வைக்க வேண்டும். பிரபாகரனை அடிப்படையாகக் கொண்டு அரசு தீர்மானங்களை எடுக்கக் கூடாது. பிரபாகரனுக்கு பின்னால் இருக்கும் தமிழ் மக்களின் நிலைமை குறித்தும் சிந்திக்க வேண்டும். ரவிராஜ் எம்.பி.கொழும்பில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நாம் வெட்கித் தலைகுனியவேண்டும். ரவிராஜை புலிகள் கொலை செய்வதற்கான காரணங்கள் இல்லை".