Tuesday, November 21, 2006

திருமலை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால்

திருமலை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்படுவோர் தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பு * தினமும் 1,500 நோயாளர் மருத்துவமனைகளில் சிகிச்சை திருகோணமலையில் அடையாளம் காணப்படாத வைரஸ் காய்ச்சல் காரணமாக நாள் தோறும் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைபெற வருவதாக பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் (திருகோணமலை) ஈ.ஜீ.ஞானகுணாளன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில், திருகோணமலை மற்றும் அதனையண்டிய பகுதிகளில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்டவர்களை அடையாளம் காணமுடியாத வைரஸ் காய்ச்சல் பீடித்துள்ளது. தினமும் வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இவ்வெண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இவ்வைரஸ் காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் திருகோணமலை பூராவும் நுளம்புகள் தேங்கி நிற்கும் பகுதிகளை அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சுத்தமாக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு செஞ்சிலுவைச் சங்கமும் ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளது. மக்களின் ஒத்துழைப்புடனேயே இதனை பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். அரச அலுவலகங்கள், பாடசாலைகளிடையே இதுபற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.