அலன் ரொக்கின் அறிக்கை ஐ.நா. படைகளை வரவழைக்கும் சூழ்ச்சியென்கிறார் வீரவன்ச
* கொழும்பிலுள்ள அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
இலங்கைப் படையினர் தொடர்பாக சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை உருவாக்கி ஐக்கிய நாடுகளின் படைகளை வட, கிழக்கில் நிலைகொள்ளச் செய்து இலங்கையைப் பிரிக்கும் சதித்திட்டத்தின் வெளிப்பாடே அலன் ரொக் வெளியிட்ட அறிக்கையின் பின்னணியாகுமெனத் தெரிவிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இவ்வறிக்கையை கண்டிப்பதாகவும் வாபஸ்பெறப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக அலன் ரொக் வெளியிட்ட கருத்தை கண்டித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நேற்று திங்கட்கிழமை காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிவரை ஒரு மணித்தியாலம் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் போதே விமல் வீரவன்ச இக்கருத்தை தெரிவித்தார்.
இலங்கை இராணுவம் சிறுவர்களை படைக்கு சேர்ப்பதோடு, கருணா குழுவிற்கு வழங்குகின்றதென இங்கு விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா.வின் விசேட பிரதிநிதி அலன் ரொக் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை எதிர்த்தே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்துகொண்டதோடு அவ்வியக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர உட்பட ஜே.வி.பி. முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாதே, சட்டரீதியான எமது படையினர் மீது சேறு பூசாதே, அலன் ரொக் தனது அறிக்கையை வாபஸ் பெற வேண்டும், எமது சுயாதிபத்தியத்தின் மீது கை வைக்காதே, ஐ.நா. படைகளை கொண்டுவரும் சூழ்ச்சியை கைவிடு போன்ற சுலோகங்களைத் தாங்கிய அட்டைகளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.
இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச;
வெறும் 10 நாட்களே இலங்கைக்கு விஜயம் செய்த அலன் ரொக் இவ்வாறானதொரு பாரிய, உண்மைக்குப் புறம்பான அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். இது எமது நாட்டின் சுயாதிபத்தியத்தின் மீது கை வைக்கும் செயலாகும்.
இந்த அறிக்கையை அவர் வாபஸ் பெற வேண்டும். ஐ.நா. படையினரை இலங்கைக்கு கொண்டுவரும் சூழ்ச்சித் திட்டத்தின் ஓரங்க நாடகமே இதுவாகுமென்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
Tuesday, November 21, 2006
ஐ.நா. படைகளை வரவழைக்கும் சூழ்ச்சியென்கிறார் வீரவன்ச
Tuesday, November 21, 2006





