இன்று பிரபாகரனின் 52 ஆவது பிறந்ததினம் நாளைய உரையில் அனைவரது கவனமும்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று தனது 52 ஆவது வயதில் காலடி பதிக்கிறார். 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்த இவர், இன்று உலகின் கவனத்தை மிகவும் கவர்ந்த விடுதலை அமைப்பொன்றின் தலைவராகத் திகழ்கிறார்.
கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் போராட்ட களத்தில் குதித்த இவரை இலங்கையில் போரென்றாலும் சரி சமாதானமென்றாலும் சரி அதில் மிகவும் முக்கியமாயிருப்பவர் என்று பெரும் எண்ணிக்கையானோர் கூறுகின்றனர். மிகவும் கட்டுக்கோப்பானதும் ஒழுக்கமுடையதுமான பெயர் பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று உலகில் விடுதலை அமைப்புகளில் தரைப்படையுடன் கடற்படை மற்றும் விமானப்படையைக்காண்டுள்ளது.
இலட்சியத்துடன் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக மிக நீண்ட ஆயுதப் போராட்டத்தை நடத்துவதன் மூலம் இன்று சர்வதேசத்தில் மிகப்பெரும் விடுதலை அமைப்பின் தலைவராகவும் பிரபாகரன் கணிக்கப்படுகிறார்.
எல்லாவற்றுக்கும் நடு நாயகனாகத் திகழ்பவர் பிரபாகரனே என இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் தளபதியான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா கூறுகின்றார். `போரென்றாலும் சமாதானமென்றாலும் எல்லாவற்றுக்கும் மிக முக்கியமானவர் பிரபாகரனே என்றும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்கிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் குல்தீப் நாயர்; இதேபோன்ற கருத்தையே, தமிழகத்தில் பிரபாகரனை நேசிக்கும் தலைவர்கள் பலரும் கூறுகின்றனர். ஒருசில தனி மனிதர்களாக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்து கெரில்லாப் படையணியாக மாற்றி, இன்று மரபு வழிப் படையணியொன்றை உருவாக்கி இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் பெரும் பகுதியை தங்கள் வசம் வைத்துள்ளதையும் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது எண்ணிக்கையை எவராலும் கணக்கிட முடியாவிட்டாலும், இதுவரை 18,000 இற்கும் மேற்பட்ட போராளிகள் மாவீரர்களாகிவிட்ட நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான போராளிகள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இன்றைய தினம் பிரபாகரனின் 52 ஆவது பிறந்ததினத்தை அனைவரும் கொண்டாடுகையில், மாவீரர் தினத்தையொட்டிய அவரது நாளைய பேச்சு இம்முறை மிகவும் முக்கியத்துவமாகக் கருதப்படுவதுடன் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sunday, November 26, 2006
இன்று பிரபாகரனின் 52 ஆவது பிறந்ததினம் நாளைய உரையில்...
Sunday, November 26, 2006





