வாகரையில் படையினர் 500 மீற்றர் தூரம் விரட்டியடிப்பு: 7 படையினர் படுகாயம். வாகரை நோக்கி சிறீலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப் பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் கஜுவத்தை இராணுவ முகாம், மாங்கேணி இராணுவ முகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரை நோக்கி கனரக ஆயுதங்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் சகிதம் பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சியை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். படையினரின் முன்னேற்ற முயற்சிக்கு ஈடுகொடுத்த விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலைத் தொடுத்து படையினரை விரட்டியடித்துள்ளனர். விடுதலைப் புலிகளிள் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்காப் படையினர் தமது நிலைகளிலிருந்துது 500 மீற்றர் தூரம் பின்வாக்கி சூனியப் பிரதேசத்தினுள் சென்றுள்ளனர் என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். இன்றை தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 7 படையினர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்காப் படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து ஆத்திரம் அடைந்த படையினர் மக்கள் குடியிருப்புக்கள் நோக்கி மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது பொதுமக்களின் நான்கு குடிமனைகள் தேசமடைந்துள்ளதோடு பொதுமக்கள் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.





