Thursday, November 30, 2006

குடாநாட்டில் மாதாந்தம் 50 பேர் வரை படுகொலை

குடாநாட்டில் மாதாந்தம் 50 பேர் வரை படுகொலை [30 - November - 2006] யாழ்.குடாநாட்டில் மாதந்தோறும் ஐம்பது பேருக்குக் குறையாமல் படுகொலை செய்யப்பட்டு வருவதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் கூறுகையில், எமக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தப் படுகொலைகள் குறித்த புள்ளிவிபரத்தை தெரிவிக்கின்றோம். இதேநேரம் பல சந்தர்ப்பங்களில் இந்தப் படுகொலைகள் தொடர்பாக எமக்கோ அல்லது வேறு எந்த மனித உரிமைகள் அமைப்புக்கோ சம்பந்தப்பட்டவர்கள் முறையிடுவதில்லை. அவை எமது புள்ளி விபரங்களிலும் உள்ளடக்கப்படுவதில்லை. இவ்வாறு மனித உரிமைகள் குழுக்களிடம் அந்தப் படுகொலைகள் குறித்து முறையிடப்படாது போவதால் அவை குறித்துப் பதிவுகள் இல்லாது போய்விடுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் குடாநாட்டுக்கான ஏ -9 பாதை மூடப்பட்ட பின்னர் இந்தப் படுகொலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளன. இதேபோன்று கடத்தல்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னரே படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளும் அதிகரித்துள்ளன. குடாநாட்டில் தற்போது மக்கள் சிக்கிப் போயுள்ளனர். அவர்களால் குடாநாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே அச்சுறுத்தல் உள்ள பலரது நிலைமை மிக மோசமாகவுள்ளது. கடந்த பல மாதங்களாக படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் நடைபெற்றபோதும் அண்மைக்காலங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தலிருப்பதாகக் கூறி முப்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் எமது ஆணைக்குழுவிடம் தஞ்சமடைந்துள்ளனர். எம்மால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க முடியாதிருப்பதால் அவர்களை நாம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளோம். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதைவிட எம்மால் வேறெதனையும் செய்ய முடியாது. தற்போது நிலைமை மோசமடைந்து வருவதாகவும் தெரிவித்தனர்.