Thursday, November 30, 2006

வாகரைக்கு சென்ற 50 லொறிகள் நேற்றும் மாங்கேணியில்...

வாகரைக்கு சென்ற 50 லொறிகள் நேற்றும் மாங்கேணியில் திருப்பி அனுப்பப்பட்டன [30 - November - 2006] மட்டக்களப்பு வாகரைப்பகுதிக்கு நேற்று புதன்கிழமை மிகக் குறைந்தளவு உணவுப் பொருட்களே அனுப்பப்பட்ட நிலையில், உணவுப் பொருட்களுடன் சென்ற சுமார் 50 லொறிகளை மாங்கேணியில் படையினர் வழிமறித்து திருப்பி அனுப்பியுள்ளனர். வாகரைக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக எதுவித உணவுப் பொருட்களும் அனுப்பப்படவில்லை. வாகரைக்கான பாதையும் முற்றாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் படையினர் மற்றும் புலிகளின் உறுதிமொழியை அடுத்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 120 லொறிகளில் வாகரைக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது அவற்றை படையினர் மாங்கேணி இராணுவ முகாமில் தடுத்து நிறுத்திவிட்டனர். வாகரையிலிருந்து புலிகள் கடும் ஷெல் தாக்குதலை நடத்துவதாகவும் வீதியின் பல இடங்களில் கண்ணி வெடிகளும் பாலங்கள், மதகுகளுக்கு கீழே வெடிகுண்டுகளும் வைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு கூறி வாகனத் தொடரணியை திருப்பியனுப்பி விட்டனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை வாகரைக்குச் சென்ற போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் (ஐ.சி.ஆர்.சி.) அங்கு புலிகளைச் சந்தித்தனர். இதன் போது புலிகள் உண்மை நிலையை விளக்கியதுடன் வாகனத் தொடரணி வாகரைக்கு வரமுன்னர் கண்காணிப்புக் குழுவினரும் ஐ.சி.ஆர்.சி.யினரும் தங்கள் பகுதியிலும் படைமுகாம்களுக்கு அருகிலும் நின்று நிலைமையை அவதானிப்பதன் மூலம், இந்த வாகனத் தொடரணி வாகரைக்கு வருவதைத் தடுப்பது யாரென்பதை அறியமுடியுமெனத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நேற்றுக் காலை 8 மணியளவில் கண்காணிப்புக் குழுவினரும் ஐ.சி.ஆர்.சி.யினரும் வாகரையிலும் கஜுவத்தை இராணுவ முகாமுக்கு அருகிலும் நின்று நிலைமையை அவதானிக்க மட்டுநகரிலிருந்து வாகனத் தொடரணிகள் வாகரையை நோக்கி வந்தன. முதலில் 15 லொறிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கு கூடாரங்களும் வேறு 15 லொறிகளில் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வாகரைக்குச் சென்றன. இதையடுத்து உலக உணவுத் திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐம்பது லொறிகளில் முழுமையாக உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு நண்பகல் 12 மணியளவில் அவை மாங்கேணி படைமுகாம் பகுதிக்கு வந்த போது படையினர் அவற்றைத் தடுத்து நிறுத்தினர். வாகரைக்குச் செல்ல அவற்றை அனுமதிக்க முடியாதெனப் படையினர் கூறவே அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து, அவ்விடத்திற்கு கண்காணிப்புக் குழுவினரும் ஐ.சி.ஆர்.சி.யினரும் யுனிசெவ், யுன்.என்.எச்.சி.ஆர். மற்றும் சர்வதேச தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மட்டக்களப்பு அரச அதிபர், மேலதிக அரச அதிபர், வாகரை பிரதேச செயலர் உட்படப் பலரும் வந்து சேர்ந்தனர். 50 வாகனங்களையும் வாகரை செல்ல அனுமதிக்குமாறும் மேலும் 50 வாகனங்களில் உணவுப் பொருட்கள் வரவுள்ளதாகவும் படையினரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், முன்னரங்க பகுதிகளில் பெருமளவு புலிகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளதால் வாகனத் தொடரணி செல்வது ஆபத்தானதெனக் கூறிய படைத்தரப்பினர் 50 உணவு லொறிகளையும் வாகரைக்குச் செல்ல அனுமதிக்க முற்றாக மறுத்துவிட்டனர். எனினும், அவ்வாறானதொரு நிலைமை இல்லையெனவும் வாகனத் தொடரணி வாகரை செல்வதற்கு புலிகள் எவ்விதத்திலும் தடையாக இல்லையெனவும் வாகனத் தொடரணி செல்வதற்கு அனுமதிக்குமாறும் கண்காணிப்புக் குழுவினரும் ஐ.சி.ஆர்.சி.யினரும் அரச உயர் அதிகாரிகளும் படையினருடன் எவ்வளவோ வாதாடியும் படையினர் அதற்கு இணங்கவில்லை. நீண்ட நேரம் இவர்களுடன் இழுபறிப்பட்ட கண்காணிப்புக் குழுவினரும் ஐ.சி.ஆர்.சி.யினரும் இது குறித்து கொழும்பிலுள்ள தங்கள் தலைமைப் பீடங்களுக்கும் உடன் அறிவித்து அரச தரப்புடனும் இராணுவ தலைமைப் பீடத்துடனும் தொடர்பு கொண்டனர். ஆனாலும், அனுமதி கிடைக்காத நிலையில் 50 உணவு லொறிகளும் நேற்று மாலை மட்டுநகர் திரும்பின. வாகரையிலுள்ள சுமார் 50,000 மக்களுக்கு 15 லொறி உணவுப் பொருட்கள் மட்டுமே கிடைத்துள்ளன.