இணைந்த வட, கிழக்கே இந்தியாவின் விருப்பம் - மன்மோகன்சிங் ஜனாதிபதி மகிந்தவிடம் தெரிவிப்பு; அரசியல் தீர்வுக்கு முயற்சிக்குமாறு வலியுறுத்தல்
[30 - November - 2006]
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றிணைக்கப்பட்ட அலகாக இருப்பதையே இந்தியா விரும்புவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன், மனித உரிமை துஷ்பிரயோகங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான செயற்பாட்டில் ஈடுபடுமாறும் வலியுறுத்தியிருக்கிறார்.
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று புதன்கிழமை மதியபோசன விருந்துபசாரமளித்த பின் மன்மோகன் சிங் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கை ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் திறந்த மனதுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திகள் தெரிவித்தன.
இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவைத் தெரிவித்த மன்மோகன் சிங், விடுதலைப் புலிகளை புதுடில்லி நன்கு விளங்கிக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி `ஐ.ஏ.என்.எஸ்.' தெரிவித்தது.
கடந்த செப்டெம்பரில் ஹவானாவில் மன்மோகன் சிங்கைச் சந்தித்து ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதேவேளை, விடுதலைப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்தல் விடுத்து இருநாள் கடந்திருக்கும் நிலையில், இரு நாட்டு அரச தலைவர்களின் சந்திப்பும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
நேற்றைய சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக ராஜபக்ஷ விளக்கமாக மன்மோகன் சிங்கிற்கு எடுத்துக் கூறியதுடன், 2005 நவம்பரில் தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் சமாதானத்தை முன்னெடுப்பதற்கு `மூச்சு விடுவதற்குக் கூட' புலிகள் கால அவகாசத்தை தமக்கு வழங்கவில்லையென குற்றம் சாட்டியுள்ளார்.
தென்னிலங்கையில் கருத்தொருமைப்பாடு காண்பதற்காக தான் அனைத்துக் கட்சிக்குழுவை அமைத்ததாகவும் தமிழ் சிறுபான்மையினருக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
தனியாக யோசனையை தான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் அது தோல்வி கண்டு விடக்கூடும் என்றும் ஏனெனில் சுதந்திரக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் போதாது என்ற வாதத்தையும் அவர் முன்வைத்திருக்கிறார்.
அனைத்துக் கட்சிக் குழுவின் யோசனைகள் அடுத்தமாதம் நடுப்பகுதியில் தயாராக இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் மன்மோகன்சிங் பொதுமக்களின் துன்பத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
பொதுமக்கள் பாதிக்கப்படும் விடயம் தமிழ்நாட்டில் உணர்வலைகளை ஏற்படுத்தி வருவதாகவும் மன்மோகன் சிங் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற வலியுறுத்தலும் மன்மோகன் சிங்கால் விடுக்கப்பட்டிருக்கிறது.
வட,கிழக்கு மாகாணம் ஒரே அலகாக இருப்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரு மாகாணங்களும் ஒரே அலகாக இருப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் அதுவும் அதற்குரிய உகந்த சூழ்நிலையின் போதே அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் இந்தியாவின் நிலைப்பாடாகும்.
இது இவ்வாறிருக்க நோர்வே மீதான தனது மகிழ்ச்சியின்மையையும் மகிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நிர்வாகத்திலுள்ள ஒரு சாரார் புலிகளுக்கு சார்பாக ஒஸ்லோ செயற்படுவதாக கூறுகின்றனர்.
நேற்றைய சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரு நாட்டு வெளிவிவகாரச் செயலாளர்கள், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Thursday, November 30, 2006
இணைந்த வட, கிழக்கே இந்தியாவின் விருப்பம்
Thursday, November 30, 2006





