Saturday, October 28, 2006

சிறீலங்காப் படைகளிற்கான மேலதிகப் பயிற்சிகளை......

இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை வலுப்படுத்தவும், இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலும், சிறீலங்காப் பாதுகாப்புப் படைகளிற்கான பயிற்சிகளை இந்தியா வழங்கவுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் இராணுவப் பயிற்சிகளிலும் பார்க்க மேலதிக பயிற்சி நெறிகளை ஆரம்பிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் முகமாக இந்திய இராணுவத்தின் பயிற்சிநெறிமுறைகளை வழிநடாத்தும் இயக்குநர் மேஜர் ஜெனரல் வி.கே.அஹ்லுவாலியா ஸ்ரீலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். கொழுமபில் தங்கியுள்ள இந்திய இராணுவ அதிகாரி, சிறீலங்காவின் பாதுகாப்புப் படைகளின் தளபதி டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் கடற்படைத் தளபதி கொமாண்டர் வசந்த கரண்ணகொட ஆகியோரை ஏற்கனவே சந்தித்துள்ளார். மேஜர் ஜெனரல் வி.கே.அஹ்லுவாலியாவுடன், இந்திய இராணுவத்தினைச் சேர்ந்த கேர்ணல் பங்கஜ் சக்ஸ்சேனா, லெப்டினன்ற் கேர்ணல் எஸ்.சி.ராணா ஆகியோரும் கொழும்பில் தங்கியுள்ளனர். பெருமளவிலான சிறீலங்காப் படைகளிற்கான இராணுவப் பயிற்சிகள் ஏற்கனவே இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.