Saturday, October 28, 2006

நிகழ்ச்சிநிரலினை ஏற்படுத்துவதில் இரு தரப்பும் இழுபறி

நிகழ்ச்சிநிரலினை ஏற்படுத்துவதில் இரு தரப்பும் இழுபறி! நோர்வே பகீரதப்பிரயத்தம்.! தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் சிறீலங்கா அரச குழுவினருக்கும் இடையே இன்றும், நாளையும் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுகளுக்கான நிகழ்ச்சிநிரல் ஒன்றைத் தயாரிக்கும் இறுதிநேர முயற்சிகள் பெரும் இழுபறி நிலையில் இருக்கின்றன. பொதுவான நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு இரு தரப்புகளையும் இணங்க வைப்பதில் நோர்வே அனுசரணையாளர்கள் மும்முரமாக முயற்சித்து வருகின்றனர். பேச்சுக்கான அனுசரணைத் தரப்பின் பொறுப்பாளரான அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம் நேற்றுமாலை ஜெனிவா வந்தடைந்து சிறீலங்கா அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பேச்சுக் குழுவினரை மாறி மாறிச் சந்தித்துப் பேசத் தொடங்கினார். எனினும், எவற்றைப் பேசுவது என்பதில் இருதரப்புகளும் தத்தமது நிலைகளில் விடாப்பிடியாக இருப்பதால் பொதுவான நிகழ்ச்சி நிரல் ஒன்றை இறுதிசெய்யும் விடயம் பெரும் இழுபறிக்குள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சமாதான முயற்சிக்குப் பொறுப்பான நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நேற்று சுவிஸ் நேரப்படி மாலை 4 மணியளவில் ஜெனிவா வந்தடைந்தார். நோர்வேயின் விசேட சமாதானத்தூதர் ஜோன் ஹன்ஸன் போவருடன் சேர்ந்து எரிக் சொல்ஹெய்ம் உடனடியாகவே அரச பேச்சுக் குழுவினரையும் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் குழுவினர்ரையும் மாறி மாறிச் சந்தித்துப் பேசத்தொடங்கினார். சமாதானப் பேச்சுகள் இன்று ஆரம்பமாக இருக்கும் நிலையில் பேச்சுக்கான பொதுவான நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரிப்பதில் எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான அனுசரணைத்தரப்பு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. எனினும், நிகழ்ச்சி நிரல் விடயத்தில் இரு தரப்புகளின் இணக்கப்பாட்டைப் பெறுவதில் பெரும் சிக்கல் நிலை காணப்படுவதாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்செய்தி அச்சுக்குப் போகும் சமயத்தில் தெரியவந்தது. இன்றைய பேச்சுக்கான உத்தேச நிகழ்ச்சி நிரல் தொடர்பில் இரண்டு தரப்புகளும் தத்தமது சொந்த நிகழ்ச்சித் திட்டத்துடனேயே பேச்சுக்கு வந்திருக்கின்றன என்று நோர்வேத்தரப்புக் கூறுகின்றது. இரண்டு தரப்புகளையும் இணக்ணகப்பாட்டுக்குக் கொண்டுவந்து பொதுவான ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பது என்பது உத்தேச பேச்சுகளை விடக் கடினமான பணியாக மாறியிருக்கிறது என்று ஜெனிவாவில் ராஜதந்திர வட்டாரங்கள் கருத்து வெளியிட்டன. தீவிரமடைந்திருக்கும் யுத்தச் சூழலைத் தணித்து மக்களின் உயிர் வாழ்க்கைப் பிரச் சினைகளுடன் சம்பந்தப்பட்ட அவசர அவசிய மனிதாபிமானச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது குறித்தே முதலில் பேசப் பட வேண்டும் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழு விடாப்பிடியாக உள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் பெரும்மனித அவலம் உருவாகக் காரணமான ஏ 9 வீதியைத் திறக்கும் விடயத்தில் ஸ்ரீ லங்கா அரசு இணங்க வேண்டும். அதற்கு அரச பிரதிநிதிகள் முரண்டு பிடித்து மறுப்பார்களேயானால் அமைதிப் பேச்சுகள் முன்நகரவே மாட்டா என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சுக் குழுத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன், ஜெனிவா நகரில் வந்து இறங்கிய கையோடு தெரிவித்து விட்டார். ஆனால், அரசுத் தரப்பும், சிறீலங்கா அரசுப் பேச்சுக் குழுவினரும் வேறு விடயங்கள் பற்றிப் பிரஸ்தாபித்திருக்கினறனர். ஜனநாயகத்தைப் பேணுதல், ஏனைய அரசியல் கட்சிகளின் அரசியல் உரிமை, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், சிறுவர்களைப் படைக்குச் சேர்க்காது இருத்தல், அதிகாரப் பகிர்வு மூலம் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் குறித்தே முதலில் பேச முடியும் என்று சிறீலங்கா அரச தரப்பு வலியுறுத்தி உள்ளது. இந்த விடயங்களே நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில் சிறீலங்கா அரசுக் குழு விடாப்பிடியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் இந்தக் கணமோ அல்லது அடுத்த கணமோ செயலிழந்து போகும் ஆபத்தான களநிலைமை நிலவு கையில் அதைச் சீர்செய்வதற்கான அடிப்படை ஏற்பாடுகளை முதன்மைப்படுத்த வேண்டும் என்கின்றனர் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பினர். இவ்வாறு எதிரும் புதிருமான நிகழ்ச்சி நிரல்களுடன் பேச்சுக்கு வந்துள்ள இரு தரப்புகளையும், பொதுவான நிகழ்ச்சித் திட்டத்துக்குச் சம்மதிக்க வைப்பது, கல்லில் நார் உரிப்பது போன்று கடினமான பணியாக இருப்பதாக அனுசரணைத் தரப்பு வட்டாரங்கள்கூறுகின்றன. பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்னர் பொதுவான நிகழ்சிநிரல் ஒன்றை உருவாக்க முடியாமற் போகும் பட்சத்தில், திட்டமிட்ட படி இரு தரப்புகளையும் இன்றைய தினம் பேச்சு மேசைக்குக் கொண்டுவந்து, பின்னர் பேசப்படும் விடயங்களை அங்கேயே பேச்சு மேசையில் தயார் செய்வது என்ற மாற்று யோசனை ஒன்றையும் அனுசரணைத்தரப்பினர் வைத்துள்ளனர் என்றும், அதற்கான இணக்கத்தைப் பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் முயற்சிஎடுப்பர் என்றும் ஜெனிவாவில் சில வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.