கப்பல் மூலமே குடாநாட்டிற்கு இனிமேல் பொருட்கள் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு. பொது மக்களுக்கான போதிய பாதுகாப்புடன் ஏ-9 வீதியில் அமைந்துள்ள முகமாலை சோதனைச் சாவடி திறக்கப்படும் வரை யாழ். குடாநாட்டின் சகல தேவைகளும் கப்பல் மூலமே அனுப்பப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜெனீவாவில் அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சுகள் முறிவடைந்த பின்னர் அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; மனிதாபிமான பிரச்சினைகள், அரசியல் தீர்வு, வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருதல், அரசியல் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகம் பற்றி இரு தரப்பினரிடையே விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஜெனீவாவில் நடைபெற்ற முதலாம் சுற்றுப் பேச்சுகளின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளுக்கேற்ப அதன் நிலைப்பாட்டினை அரசாங்கம் இங்கு வலியுறுத்தியது. மனிதாபிமான விடயங்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தின் சகல தேவைகளும் தொடர்ந்தும் கடல் மார்க்கமாக அனுப்பப்படும் என அரசாங்கம் தெரிவித்தது. கப்பல்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குமாறு கேட்ட போது, அதற்கு இணங்க விடுதலைப் புலிகள் மறுத்து விட்டனர். பொதுமக்களுக்கான போதிய பாதுகாப்புடன் ஏ-9 வீதியில் அமைந்துள்ள முகமாலை சோதனைச் சாவடி திறக்கப்படும் வரை, உணவு மற்றும் ஏனைய பொருட்கள் உள்ளிட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்ய எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்தே இவ்வாயில் மூடப்பட்டது. தொடர்ந்தும் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் பாதுகாப்பற்ற நிலையே அங்கு நிலவுகிறது. அரசியல் தீர்வைப் பொறுத்த மட்டில், தெற்கில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் விரிவாக விளக்கிக் கூறப்பட்டன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அணுகுமுறையை ஏற்றுக் கொள்வதற்கு இப்போது சகல அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளன. தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒத்துழைப்பு வழங்குவதற்கான ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பெறுமதியையும் அரசாங்கத் தரப்பினர் எடுத்துக் கூறினர். அடுத்த சுற்றுப் பேச்சுகளுக்கான திகதியொன்று பற்றி இணங்க புலிகள் மறுத்துவிட்டனர். தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காணுமுகமாக எந்த நேரத்திலும் சந்திப்பொன்றை நடத்த அரசாங்கம் தயாராகவும் விருப்புடனும் இருந்து வருகிறது.





