மன்னார் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிக்கான உயிலங்குளம் பாதையூடான போக்குவரத்தினை வாரத்தில் மூன்று தினங்கள் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இப்பாதையூடாக மூன்று நாட்கள் போக்குவரத்து மேற்கொள்ளப்படும் என்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வி. விஸ்வலிங்கம் தெரிவித்தார்.படையினருக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலை காரணமாக ஏ 9 பாதை மற்றும் உயிலங்குளம் பாதையூடான போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டன. இராணுக் கட்டுப்பாடற்ற பகுதிக்கு அரசாங்க ஊழியர்கள், பொதுமக்கள் சென்று வருவதற்காகவும் உணவுப்பொருட்களை எடுத்து செல்வதற்காகவும் உயிலங்குளம் ஊடான போக்குவரத்து வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் இடம்பெற்று வந்தது. தற்போது புதன்கிழமையும் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு படையினர் இணங்கியுள்ளதையடுத்து வாரத்தில் 3 தினங்கள் போக்குவரத்து இடம்பெறவுள்ளது.





