மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சிலவாரங்களாக படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே பரஸ்பரம் இடம்பெற்றுவரும் எறிகணைத்தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு யுத்த சூழல் உருவாகி வருகின்றது என்றால் மிகையாகாது. இரவு பகல் என்றில்லாது எந்த நேரத்திலும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் சிலர் பலியாகி இருப்பதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். பல வீடுகளும் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.விடுதலைப் புலிகள் இராணுவப் படை முகாமை நோக்கியும், படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கியும் பரஸ்பரம் சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு பிரிகேட் தலைமையக வவுணதீவு, கொம்மாதுறை, முறக்கொட்டாஞ்சேனை, மாவடிவேம்பு, களுவன்கேணி, வாழைச்சேனை ஆகிய படை முகாம்களிலிருந்து அதிகமான எறிகணைகள் ஏவப்பட்டு வருகின்றன.இந்த எறிகணை வீச்சுக்களால் சில இடங்களில் மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க மூதூர் சம்பூரிலிருந்து அசம்பாவிதங்களால் இடம்பெயர்ந்து வாகரைக்கு வந்து சேர்ந்த மக்கள் அங்கும் நிம்மதியாக வாழ முடியாத நிலையில் தெற்கு நோக்கி வாழைச்சேனை, வந்தாறு மூலை, செங்கலடி, ஏறாவூர், மட்டக்களப்பு, அக்கரைப்பற்று பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.வாகரையில் எஞ்சியிருக்கும் மக்கள் பல்வேறு அவலங்களை அனுபவித்து வருகின்றனர். உடுத்த உடையுடன் வெளியேறி வந்த சம்பூர் மக்கள் இன்று வாகரையில் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர். வாகரைப் பிரதேசத்திற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் சென்று வருவதற்கு படையினரால் கதவடைப்புச் செய்யப்பட்ட நிலையில், நிவாரண உதவிகளை வழங்குமாறு கோரி இங்குள்ள மக்கள் கடந்தவாரம் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி தமது அவலத்தை அரசுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தைப் போக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சம்பூரை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர், மூதூர், கணேசபுரம், செல்வாநகர், முட்டுச்சேனை, பாட்டாளிபுரம், ஈச்சிலம்பற்றை, வாழைத்தோட்டம் ஆகிய கிராமங்களிலிருந்து சுமார் 45 ஆயிரம் மக்கள் வாகரை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். போரினாலும், சுனாமியாலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த வாகரைப்பிரதேசம் தஞ்சம் கோரி வந்த மக்களை தாபரிக்கக்கூடிய வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. இதனால் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைக் கட்டிடங்கள் தவிர மரநிழல்களிலும் காடுகளிலும் தஞ்சமடைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அல்லல்படுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இவர்களுக்கு கூடாரங்களை வழங்குவதற்கு சில அரசசார்பற்ற அமைப்புக்கள் முயற்சித்த போதிலும் அதுவும் படையினரின் அனுமதியின்றி கைகூடவில்லை.இவ்வாறு இன்னல்களை அனுபவித்துவரும் அகதிகளுக்கு மனதாபிமான ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்கள் பல முன்வந்த போதிலும், படையினரின் தடை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 25க்கு மேற்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வந்த போதிலும், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், தென்னிந்திய திருச்சபை போன்ற ஒரு சில அமைப்புக்களுக்கு மட்டுமே மாங்கேணி படைமுகாம் ஊடாக வாகரைக்கு உலர், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றது. அகதிகளுக்கு அரசாங்கம் நிவாரண உதவிகளை வழங்குவதாக தெரிவித்த போதிலும் வாகரையிலுள்ள மக்களின் தேவைக்கு ஏற்ப நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. பச்சிளம் குழந்தைகளுக்கு பால்மா கூட இல்லாத நிலை அங்கு காணப்படுகின்றது.இதேவேளை பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள வாகரையிலுள்ள மக்கள் அண்மையில் கண்டனப் பேரணியொன்றையும் நடத்தியுள்ளனர். பட்டினிச் சாவு போட்டு எங்களைக் கொல்லாதே! வாகரை வருவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கு! என பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் பதாதைகளைத் தாங்கியவாறு ஊர்வலமாகச் சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாகரை பிரதேச செயலாளரிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.இந்த மனுவில் அரசினால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை. அரசசார்பற்ற நிறுவனங்கள் வாகரைக்கு வந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். வாகரைப் பிரதேசத்திற்கு மரங்கள், கிடுகுகள் எடுத்துச் செல்வதற்கு படையினர் விடுத்துள்ள தடையை நீக்க வேண்டும். எதிர்வரும் மாதங்கள் மழைக்குரிய மாதங்களாக இருப்பதால் இதுவிடயமாக உடன் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் எறிகணைத் தாக்குதல்கள், கிபீர் விமான குண்டுவீச்சு தாக்குதல்கள் இடம்பெறமாட்டாது என அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.





